பருவத்துக்கேற்றவாறு வாழை ரகங்கள் சாகுபடி செய்வதே மிகவும் நல்லது...ஏன்?
வாழை சாகுபடி
நம் நாட்டில் பலவிதமான வேளாண் பருவநிலை நிலவுவதால், ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்தப் பருவத்துக்கேற்ற வாழை ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
பூவன், செவ்வாழை, ரொபஸ்டா, மொந்தன், கதலி, ரஸ்தாளி, விருப்பாச்சி பச்சைநாடன், நேந்திரம், கற்பூரவல்ல போன்றவை தமிழ்நாட்டில் வியாபார ரீதியாகப் பயிரிடப்படும் சில முக்கியமான ரகங்கள். ரகங்களைப் பொறுத்து சாகுபடி காலமும் மாறுபடும்.
வாழையை சுழற்சிப்பயிர், கலப்புப்பயிர், ஊடுபயிர், சார்புப்பயிர்… என அனைத்து வகையாகவும் பயிர் செய்யலாம். இதற்கு நீர்ப்பாசனம் அவசியம். விதைகள் மூலம் வாழைக்கன்றுகள் உருவாக்குவதில் பல சிக்கல்கள் இருப்பதால், பெரும்பாலும் விதைக்கிழங்கைப் பயிரிடுவதன் மூலமாகத்தான் சாகுபடி செய்யப்படுகிறது.
தரமான விதைக்கிழங்குகளை நடவு செய்தால்தான் அதிகளவு விளைச்சலை ஈட்ட முடியும். அதாவது தேர்ந்தெடுக்கப்படும் விதைக்கிழங்கு நல்ல எடையுடன் (600 கிராமிலிருந்து 900 கிராம் வரை) இரண்டு மாத வயதுள்ள பக்கக் கன்றிலிருந்து தோண்டியதாக இருக்க வேண்டும்.
குறிப்பாக, ரசாயன உரம் மற்றும் பூச்சிகொல்லிகள் பயன்படுத்தப்படாத தாய்மரத்தில் இருந்து வந்திருக்க வேண்டும். அதில் முளைத்திருக்கும் இலை குறைந்த அகலத்துடன் கத்தி போல் இருக்க வேண்டும். அனைத்து விதைக்கிழங்குகளும் ஏறத்தாழ ஒரே அளவில் இருப்பது நல்லது.
ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை ஒரு பருவம்; செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை ஒரு பருவம்; டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை ஒரு பருவம் என வாழைக்கு மூன்று பருவங்கள்.
ஜூன் மாதத்தில் நடவு செய்த வாழை நல்ல வீரியத்துடன் வேகமாக வளரும். அக்டோபர் மாதத்தில் பயிர் செய்த வாழை மெதுவாகவும் ஒரே சீராகவும் வளரும்.
வழக்கமாக அதிக எண்ணிக்கையில் மரங்கள் இருக்க வேண்டும் என்பதற்காக 4 அல்லது 5 அடி இடைவெளியில் வாழை நடவு செய்வதைக் கடைபிடித்து வருகிறார்கள். ஆனால் இம்முறையில் அதிக மகசூல் கிடைக்காது.
பல்வேறு ரகங்களை பலதரப்பட்ட வேளாண் பருவநிலை உள்ள நிலங்களில் வெவ்வேறு இடைவெளிகளில் நடவு செய்து நான் சோதனை மேற்கொண்டேன். அதில், அதிக இடைவெளி விட்டு சாகுபடி செய்த நிலத்தில் அதிக எண்ணிக்கை மற்றும் அதிக எடையும் கொண்ட பழங்கள் விளைந்தன.
அதை வைத்துதான் நெட்டை ரகங்களுக்கு 8 அடி இடைவெளியும் மற்ற நாட்டு ரகங்களுக்கு 12 அடி இடைவெளியும் தேவை என உறுதிப்படுத்தியிருக்கிறேன். அதாவது ஒரு வாழைக்கு 30 சதுர அடி பரப்பளவு கொடுத்து பயிரிடும்போது ஒளிச்சேர்க்கை நன்கு நடைபெற்று விளைச்சல் அதிகரிக்கும்.
இந்த இடைவெளியில் நடவு செய்து கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் நிறைய விவசாயிகள் ஜீரோ பட்ஜெட் முறையில் சாகுபடி செய்து அதிக மகசூலை எடுத்திருக்கிறார்கள். ஒரு மரத்துக்கு 30 சதுர அடி இடைவெளி விடும்போது, ஒரு ஏக்கரில் 1,435 வாழைகளை நடவு செய்ய முடியும்.