யூரியாவை விட சிறந்தது இயற்கை மருந்துதான். எப்படி?
பயிர் செழிப்பாக வளர, யூரியா மிகவும் அவசியம் என்ற தவறான எண்ணம், நம் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. நைட்ரஜன் சத்தை செடிகள் கிரகிப்பதற்காகவே, உப்புத் தன்மை அதிகம் உள்ள யூரியாவை பயன்படுத்துகிறோம்.
செடிகளின் வேர்களில் நீர்ச்சத்து இருக்கும் வரை தான், நாம் போடும் யூரியாவை உறிஞ்சும். மீதி உள்ள யூரியா பூமிக்கடியில் சென்று தங்கி விடும்.
இப்படி ரசாயன உரங்களும், யூரியாவும் அதிகப்படியாக பூமியில் சேருவதால், இயற்கையாக வளரும் நன்மை செய்யும் பல நுண்ணுயிரிகள் அழிந்து விடுகின்றன.
இயற்கை உரம் தயாரிக்கும் முறை :
ஒரு பாத்திரத்தில், 5 கிலோ சாணம், 3 கிலோ மாட்டுச் சிறுநீர், அரை கிலோ வெல்லத்தை கலந்து, மூடி வைத்து நொதிக்க விட வேண்டும். இன்னொரு பாத்திரத்தில் நன்கு கனிந்த, 15 வாழைப்பழம், கால் கிலோ வெல்லத்தை கலந்து நொதிக்க விட வேண்டும்.இரண்டு நாட்கள் கழித்து, இந்த இரண்டு கலவையையும் ஒன்றாக்கி, ஓரிரு நாட்களுக்கு நொதிக்க வைக்க வேண்டும்.
இதனுடன், தலா ஒரு கிலோ ரைசோபியா, அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனாஸ் கலந்து, ஒரு இரவு நொதிக்க விட வேண்டும்.இந்தக் கரைசல், தோசை மாவு பதத்திற்கு மாறி இருக்கும். இதோடு, 2 கிலோ கடலைப் புண்ணாக்கு கலந்து, சில மணிநேரம் வைத்திருந்தால் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு, புட்டு பத்திற்கு மாறிவிடும்.
இதை, ஒரு ஏக்கர் நெல் வயலில் பரவலாக தெளிக்க வேண்டும். அடுத்த சில நாட்களில் மண்ணில் நுண்ணுயிரிகள் பெருகி, பயிர் பச்சை பிடித்து, ஆரோக்கியமாக வளர துவங்கி விடும். இந்த இடுபொருளை, ‘மேம்படுத்தப்பட்ட அமுதக் கரைசல்’ என, அழைக்கின்றனர்.
இதுதவிர, இலை, தழைகளை கொண்டே இடுபொருள் தயாரித்து, இலைவழி தெளிப்பாகவும், ஊட்டச்சத்து கொடுக்கலாம்; இது, பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சி விரட்டியாகவும் பயன்படும்.