கனகாம்பரம் சாகுபடியில் விவசாயிகள் கவனிக்க வேண்டியவை…

agricultural tips-fatjlp

கனகம் எனத் தங்கத்தின் பெயரைத் தன் பெயரில் கொண்டு கண்ணைக் கவரும் வண்ண நிறத்தில் காணப்படும் மலர் கனகாம்பரம். ஏழைகளின் மலர் என இதை அனைவரும் போற்றுவதில் எந்தத் தவறும் இல்லை.

இத்தகைய கனகாம்பரம் சாகுபடி முறைகளை விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

கனகாம்பரத்தைப் பொருத்தவரை ஆரஞ்சு, சிகப்பு, தில்லி கனகாம்பரம் ஆகியவை சாகுபடிக்கு ஏற்றவை. நல்ல வடிகால் வசதியுள்ள மணற்சாரி வண்டல் மண் கனகாம்பரம் பயிரிட உகந்தது. ஜூலை - அக்டோபர் விதைப்புக்கு ஏற்ற பருவம். புதிய விதைகளையே பயன்படுத்த வேண்டும். மேட்டுப்பாத்தி அமைத்து 15 செ.மீ. இடைவெளியில் அமைந்த வரிசையில் விதைக்க வேண்டும்.

நாற்றங்காலுக்குப் பூவாளியால் தினசரி நீர் தெளிக்க வேண்டும். 60 நாள் வயதுடைய நாற்றுகள் நடுவதற்கு ஏற்றவை. ஒரு ஏக்கர் நடவு செய்ய 2 கிலோ விதை தேவைப்படும்.

தில்லி கனகாம்பரத்துக்கு வேர்ச்செடித் துண்டுகள் மூலம் நடவு செய்யலாம்.

நடவு:

நிலத்தை மூன்று முறை உழுது, ஏக்கருக்கு 10 டன் தொழு உரம் இட்டுக் கலக்க வேண்டும். இரண்டு அடி இடைவெளிகளில் பார் அமைத்து நாற்றின் வேர்களை ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் கலந்து தயாரிக்கப்பட்ட கார்பண்டசிம் கரைசலில் நனைத்து, பாரில் ஒரு அடி இடைவெளியில் பாரின் ஒரு பக்கமாக நட வேண்டும்.

தில்லி கனகாம்பரத்துக்கு செடிக்கு செடி 40 செ.மீ. இடைவெளி விடவேண்டும். கனகாம்பரம் செடிகளுக்கு வாரம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.

உரமிடல்:

ஏக்கருக்கு 30 கிலோ தழைச்சத்து தரவல்ல 65 கிலோ யூரியா, 20 கிலோ மணிச்சத்து தரவல்ல 125 கிலோ சூப்பர் பாஸ்பேட், 50 கிலோ சாம்பல் சத்து தரவல்ல 85 கிலோ மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை நட்ட மூன்றாம் மாதம் மேலுரமாக இட வேண்டும். இதே அளவு உரங்களை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை என மேலும் இரண்டாண்டுகளுக்கு இட வேண்டும்.

தில்லி கனகாம்பரத்துக்கு ஏக்கருக்கு 10 டன் தொழு உரத்துடன் 40 கிலோ ஜிப்சம், மணிச்சத்து 20 கிலோ தரக்கூடிய 125 கிலோ சூப்பர் பாஸ்பேட், சாம்பல் சத்து 40 கிலோ தரக்கூடிய 67 கிலோ மியூரேட் ஆப் பொட்டாஷ் ஆகிய உரங்களை அடியுரமாக இட வேண்டும்.

நடவு செய்த 30-ஆம் நாள் ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 16 கிலோ தழைச்சத்து தரக்கூடிய 35 கிலோ யூரியா

ஆகியவற்றை மேலுரமாக இட வேண்டும்.

நடவு செய்த 90-ஆம் நாள் ஏக்கருக்கு 16 கிலோ தழைச்சத்து தரக்கூடிய 35 கிலோ யூரியா, 8 கிலோ மணிச்சத்து தரக்கூடிய 50 கிலோ சூப்பர் பாஸ்பேட், 24 கிலோ சாம்பல் சத்து தரக்கூடிய 40 கிலோ மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை இட வேண்டும். இதே அளவு உரங்களை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என இரண்டாண்டுகளுக்கு இட வேண்டும். அதிக மகசூல் பெற ஒரு லிட்டர் நீருக்கு, ஒரு கிராம் அளவில் அஸ்கார்பிக் அமிலம் கலந்து தெளிக்கலாம்.

பயிர்ப் பாதுகாப்பு:

அசுவிணியைக் கட்டுப்படுத்த டைமிதியேட் 30 ஈ.சி. மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. அளவில் கலந்து தெளிக்க வேண்டும். வாடல் நோயைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு அரை கிராம் கார்பண்டசிம் மருந்து கலந்த கரைசலை செடிகளை சுற்றி மண்கண்டம் நனையும்படி ஊற்றவும்.

அறுவடை:

நடவு செய்த ஒரு மாதத்தில் பூக்கத் தொடங்கும். இரண்டு நாள்களுக்கு ஒரு முறை முழுவதும் மலர்ந்த மலர்களைப் பறிக்கலாம். ஒரு வருட மறுதாம்பு உட்பட மூன்றாண்டுகள் முடியப் பராமரிக்கலாம். ஆண்டிற்கு ஒரு ஏக்கருக்கு 800 முதல் 1000 கிலோ மலர்கள் கிடைக்கும். டெல்லி கனகாம்பரம் ஒரு ஏக்கருக்கு ஆண்டிற்கு 1200 கிலோ மலர்களை தரும்.

எனவே, விவசாயிகள் கனகாம்பரம் சாகுபடியில் இந்த தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்துப் பலன் பெறலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios