Asianet News TamilAsianet News Tamil

40 ஆயிரம் வருமானம் தரும் வெண்டை சாகுபடி…

40 thousand-of-income-ladies-finger-cultivation
Author
First Published Dec 1, 2016, 2:23 PM IST


சிவகங்கை போன்ற வறட்சியான மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதிலும் கோடை என்றால் கேட்கவே வேண்டாம். இந்த காலத்தில் வெப்பத்தை தாங்கி வளரும் பயிர்களை சாகுபடி செய்தால் மட்டுமே விவசாயிகள் தப்பிக்க முடியும்.

கண்டிப்பட்டி விவசாயி கே.ரவி தனது 40 சென்ட் நிலத்தில் வெப்பத்தை தாங்கி வளரும் வெண்டையை சாகுபடி செய்துள்ளார்.

விதை, உரம் என, ரூ.5 ஆயிரம் வரை செலவு செய்துள்ளார். ‘பம்பு செட்’ மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகிறார். விதைத்த 40 நாட்களில் இருந்து வெண்டைக்காய் காய்க்க துவங்கியது.

தினமும் 50 முதல் 60 கிலோ வரை பறித்து சிவகங்கை, காரைக்குடி, காளையார்கோவில் சந்தைகளில் விற்பனை செய்கிறார்.
அவர் கூறியதாவது:

வெண்டை மூன்று முறை நன்கு உழவு செய்ய வேண்டும். கடைசி உழவுக்கு முன் தொழு உரம் இட வேண்டும். 45 செ.மீ., இடைவெளியில் பாத்திகள் அமைக்க வேண்டும்.
விதைகளை 30 செ.மீ., இடைவெளியில் 2 விதைகள் என்ற விகிதத்தில் 2 செ.மீ., ஆழத்தில் ஊன்ற வேண்டும். விதைகளை ஊன்றியவுடன் நீர்பாய்ச்ச வேண்டும். அதன்பின் வாரம் ஒருமுறை நீர்பாய்ச்சினால் போதும்.

அடியுரமாக தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்துக்களை மண்ணுடன் கலந்து இட வேண்டும். நடவு செய்த 30 நாட்களில் மேலுரமாக தழைச்சத்து இட வேண்டும். அளவுக்கு அதிகமாக உரங்களை பயன்படுத்தினால் காய் முற்றிவிடும்.
வெண்டையை அதிகளவில் காய் துளைப்பான் தாக்கும். இதை கட்டுப்படுத்த வேப்பம் கொட்டை பொடி 50 கிராமை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளித்தால் போதும். விதைத்த 40 நாட்களில் காய்களை பறிக்கலாம்.

முற்ற விடாமல் தினமும் பறித்தால் நல்லது. தினமும் 50 முதல் 60 கிலோ வரை கிடைக்கிறது. ஒரு கிலோ ரூ.16 முதல் ரூ.20 வரை விற்கிறோம், என்றார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios