மூலிகையில் நிலையான அறுவடைக்கான 10 எளிய வழிகள்…
பண்டைய மனிதர்கள் தமக்கு பயன்படும் தாவரங்களை பாதுகாக்கும் வண்ணம் அவற்றை தெய்வீக மூலிகைகளாக்கி அவற்றை விழாக்காலங்களில் கௌரவித்தனர்.
இயற்கை வளங்களை சரியான முறையில் பயன்படுத்துவது ஒன்றே மனித குலத்தின் நீண்ட வாழ்வுக்கு வழிவகுக்கும்.
தமிழகத்தில் 17, ஆயிரத்து 672 ஆன்ஜியோஸ்பெர்ம் தாவர வகைகள் காணப்படுகிறது. இவற்றில் 1559 மூலிகை என கண்டறிப்பட்டது.
இந்த மூலிகைகள் மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது.
இங்கு துளசி, கீழாநெல்லி, சாரனைகொடி, மேலாநெல்லி, கரிசலாங்கண்ணி முதலியன அதிக அளவில் தரிசு நிலங்களில் இருந்து அறுவடை செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
ஏராளமான நிலமற்ற குடும்பங்கள் குறிப்பாக வயதான மற்றும் ஆதரவற்ற பெண்களின் முக்கிய வருமானமாக மூலிகை விளங்குகிறது. மேலும் பழங்குடி மக்களின் அடுத்த வேளை உணவே இவற்றின் அடிப்படையிலே தீர்மானிக்கப்படுகிறது.
மக்களின் தடையற்ற வாழ்வியலுக்கு மூலிகைகள் தொடர்ச்சியாக கிடைக்கப்பெற வேண்டும் எனில் அவற்றை சரியான முறையில் அறுவடை செய்ய வேண்டும்.
மூலிகையில் நிலையான அறுவடைக்கான வழிமுறைகள்:
1. அறுவடைக்கு முன் சரியான செடியை அடையாளம் காணவேண்டும்.
2. குறிப்பிட்ட மூலிகையின் எண்ணிக்கை அதிகம் உள்ள இடங்களில் மட்டுமே அறுவடை செய்ய வேண்டும்.
3. ஆரோக்கியமான சில செடிகளை இனப் பெருக்கத்திற்காக விட்டுவிட வேண்டும்.
4. முதிர்ந்த தாவரம் மட்டுமே அறுவடை செய்யப்பட வேண்டும்.
5. அறுவடையானது அத்தாவரத்தின் வாழ்க்கை சுழற்சியை மையமாகக் கொண்டு மேற்கொள்ள வேண்டும்.
6. தாவரத்தின் இலைகள் பறிக்கப்படும் போது தாவரத்தின் மற்ற பாகங்கள் பாதிக்கா வண்ணம் அறுவடை செய்யப்பட வேண்டும்.
7. தாவரத்தின் ஆணிவேரை அறுவடை செய்ய நேர்ந்தால் அதன் பக்க வேர்களை அறுவடை செய்யாமல் விடவேண்டும்.
8. தாவரத்தில் நமக்கு தேவையான பகுதியை மட்டுமே அறுவடை செய்ய வேண்டும். முழுச்செடியை பிடுங்குவதை தவிர்க்க வேண்டும்.
9. அறுவடை செய்த இடத்தில் அதன் விதைகளை முளைப்பதற்காக விட்டுவிடலாம்.
10. பட்டைகள் அறிவியல் முறையை பின்பற்றி அறுவடை செய்ய வேண்டும். பட்டை முழுவதும் எடுக்கப்பட்டால் அந்த இனமே நாளடைவில் அழிந்துவிடும்.