ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர டொனால்டு டிரம்ப் ஒரு புதிய சமாதானத் திட்டத்தை முன்மொழிந்துள்ளார். பாதுகாப்பு உத்தரவாதங்கள், எல்லை கண்காணிப்பு மற்றும் புனரமைப்பு உதவிகளை உள்ளடக்கிய இந்தத் திட்டத்தை ரஷ்யா தற்போது ஆய்வு செய்து வருகிறது.
கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்துள்ள புதிய சமாதானத் திட்டத்தின் விவரங்களை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அதிகாரபூர்வமாகப் பகிர்ந்துள்ளார்.
சமாதானத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
இந்தத் திட்டம் உக்ரைன் மற்றும் அமெரிக்கத் தரப்பில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, தற்போது ரஷ்யாவின் பதிலுக்காக மாஸ்கோவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஜெலென்ஸ்கி செய்தியாளர்களிடம் பேசியபோது 20 அம்சத் திட்டத்தின் முக்கியப் பகுதிகளை விளக்கினார்.
பாதுகாப்பு உத்தரவாதம்: போர் முடிந்த பிறகு உக்ரைனின் ராணுவம் அமைதிக்காலத்தில் 8,00,000 வீரர்களைக் கொண்டிருக்கும். நேட்டோ அமைப்பின் 5-வது விதியைப் போலவே (Article 5), உக்ரைன் மீண்டும் தாக்கப்பட்டால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்பு வழங்கும்.
கண்காணிப்புப் பணி: எல்லையில் மோதல்கள் ஏற்படாமல் இருக்க, விண்வெளி மற்றும் ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் ஒரு நவீன கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்படும்.
மீள்கட்டமைப்பு: போர் முடிவுக்கு வந்த பிறகு உக்ரைனை மீண்டும் கட்டியெழுப்ப அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி வழங்கும்.
தீர்க்கப்படாத சிக்கல்
இந்தத் திட்டத்தில் பல அம்சங்களில் இணக்கம் காணப்பட்டாலும், ரஷ்யா ஆக்கிரமித்துள்ள உக்ரைன் நிலப்பரப்புகள் குறித்த விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.
"அமெரிக்கத் தரப்பு சில சமரசங்களை எதிர்பார்க்கிறது, ஆனால் உக்ரைன் தனது நிலப்பரப்பை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை," என்று ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, டான்பாஸ் (Donbas) பகுதியில் 'சுதந்திரப் பொருளாதார மண்டலம்' அமைக்கும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
ரஷ்யாவின் நிலைப்பாடு
இந்தத் திட்டங்கள் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா தற்போது இந்த அம்சங்களை விரிவாக ஆராய்ந்து வருவதாகவும், விரைவில் தனது அதிகாரபூர்வ நிலப்பாட்டைத் தெரிவிக்கும் என்றும் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.
"இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக உள்ளன," என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். புடின் மற்றும் ஜெலென்ஸ்கி இடையே கடுமையான பகை நிலவுவதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவது சவாலானது என்றாலும், அது சாத்தியமே என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


