பின்லாந்தின் 45 வது பிரதமர், ஆண்டி ரின்னே மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் கடந்த  3 ஆம் தேதி தங்களது கூட்டணி கட்சியின் நம்பிக்கையை இழந்தனர். இதையடுத்து  அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து பின்லாந்து சமூக ஜனநாயகக் கட்சி டிசம்பர் 8 ஆம் தேதி பிரதமர் வேட்பாளராக சன்னா மரினை தேர்வு செய்தது.

2015 முதல் பின்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் சன்னா மரின், இந்த ஆண்டு ஜூன் மாதம் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சராக பதவியேற்றார்.

இதையடுத்து சன்னா மரின் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டார். விரைவில் அவர் பிரதமராக பதவியேற்பதன் மூலம், இளம்வயது பிரதமர் மற்றும் பின்லாந்தின் மூன்றாவது பெண் அரசாங்கத் தலைவர் என்கிற பெருமையினை படைக்க உள்ளார்.

இடது கூட்டணி, கிரீன் லீக், சென்டர் பார்ட்டி  மற்றும் பின்லாந்து ஸ்வீடிஷ் மக்கள் கட்சி ஆகிய நான்கு கட்சிகளின் கூட்டணி சேர்ந்து சமூக ஜனநாயகக் கட்சி ஏப்ரல் 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றிருந்தது.

ஆண்டி ரின்னேயின் ஊதியக் குறைப்புத் திட்டங்கள் அஞ்சல் ஊழியர்களின் பரவலான வேலைநிறுத்தங்களுக்கு வழிவகுத்த பின்னர், சென்ட்ர் பார்ட்டி  அவர் மீதான நம்பிக்கையை இழந்து ஆதரவை திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.