கொரோனா தொற்று பிரச்சனையை சாதகமாக்கி இந்திய துருப்புகள் மீது சீனா தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. 

இதுகுறித்து, வாஷிங்டனில் கிழக்காசியா மற்றும் பசிபிக் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணைச்செயலாளர் டேவிட் ஸ்டில்வெல்  செய்தியாளர்களிடம் பேசுகையில்,  இருநாட்டு எல்லையான லடாக் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் மீது சீனா நடத்தியது கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்கு தெரியாத எதிரி ஆட்டிப்படைத்துவருகிற நிலையில், உலகின் ஒட்டுமொத்த கவனமும், அதை வீழ்த்துவதில் திரும்பி இருந்தபோது சீனா நிலைமையை தனக்கு சாதகமாக்கிக்கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உயிர் காத்துக்கொள்வதில் உலகத்தின் கவனம் இருக்கிறது. கொரோனா தொற்று நோயில் இருந்து மீள்வதில் ஒட்டு மொத்த உலகமும் இருக்கிறது. இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு சீனா செயல்பட்டு வருகிறது. இந்தியா, சீனா எல்லைப்பிரச்னையை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

இந்தியாவுடனான சீனாவின் தற்போதைய நடவடிக்கைகள் ஒன்றும் புதிதல்ல. 2015-ம் ஆண்டு சீன அதிபர் ஜின்பிங் இந்தியாவுக்கு முதன் முதலாக சென்றார். அந்த சர்ச்சைக்குரிய பகுதியை வரலாற்றில் இல்லாத வகையில் அதிக துருப்புகளுடன் சென்று சீனா ஆக்கிரமித்தது. இது பேச்சு வார்த்தை தந்திரமா? அல்லது அவர்களின் பலத்தை நிரூபிக்க மூக்கில் குத்துவதா என்பது எனக்கு தெரியவில்லை.

ஆனால் பூடான் அருகே டோக்லாம் பிரச்சனையை பார்த்தபோது, இதே போன்ற கவலையடைந்தோம். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, சீன வெளியுறவுத்துறை உயர் அதிகாரி யாங் ஜீச்சி இடையேயான பேச்சு வார்த்தையின் போது, இந்திய சீன எல்லை மோதல் விவகாரம் பேசப்பட்டதா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் சீனாவின் தற்போதைய நடத்தை கவலையளிப்பதாக உள்ளது. 

இந்தியாவை, தென்சீன கடலை, ஹாங்காங் விவகாரங்களில் சீனாவின் செயல்பாடுகள் ஆக்கப்பூர்வமாக இல்லை. சீனாவுடன் நியாயமான, பரஸ்பரமான ஆக்கப்பூர்வமான முடிவு சார்ந்த உறவைத்தான் அமெரிக்கா விரும்புகிறது. இது வெறும் வார்த்தையளவில் இருக்கக்கூடாது. செயல்களிலும் இருக்க வேண்டும்’’என அவர் தெரிவித்துள்ளார்.