சீனா அதிபர் ஜி ஜின்பிங்கை இனி ஜனாதிபதி என்றோ, அதிபர் என்றோ அழைக்கக் கூடாது என அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இல்லை, சீனாவில் ஜனநாயகம் என்பதே இல்லை என அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்சீனக்கடல் விவகாரம் தொடங்கி, கொரோனா வைரஸ் பரவல் விவகாரம் வரை அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. திட்டமிட்டு கொரோனா வைரஸை சீனா பரப்பியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ உள்ளிட்டோர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். அதைத்தொடர்ந்து அமெரிக்காவை சீனா தனது தொழில்நுட்பம் மூலம் வேவு பார்ப்பதாக கூறி ஹூஸ்டனில் இருந்த சீன தூதரகத்தை அமெரிக்கா அதிரடியாக மூடியுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர உறவுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவி வந்த பனிப்போர் தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் சீனாவுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கையில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது, சீன செயலிகள் விரைவில் அமெரிக்காவில் தடை செய்யப்படும் என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்நிலையில் ட்ரம்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்த ஸ்காட் பாரி என்ற நாடாளுமன்ற உறுப்பினர் சீன அதிபர் ஜி ஜின்பிங்க்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா ஒன்றை கொண்டு வந்துள்ளார். அதாவது சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை சீனாவின் ஜனாதிபதி என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கக் கூடாது என்றும், ஏனெனில் அதிபர் ஜி ஜின்பிங் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல என்றும், மொத்தத்தில் சீனாவில் ஜனநாயகமே இல்லை  என்பதால் அவரை அமெரிக்கா இனி ஜனாதிபதி என்றோ, அதிபர் என்று அழைக்கக் கூடாது என அம்மசோதாவில் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், தற்போது அவரை ஜனாதிபதி எனக் குறிப்பிடுவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும். அவர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருப்பதால் அவருக்கு இந்த பதவி கிடைத்தது. 

அரசியலமைப்பு ரீதியாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் அரசாங்கம் மற்றும் ராணுவத்தின் தலைவராக உள்ளார். ஆனால் ஜி ஜின்பிங் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல, அவர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சூப்பர் கமிட்டிகளின் தலைவராக உள்ளார். அதேபோல சர்வதேச வல்லுநர்கள் அவரை எல்லாவற்றிற்கும் தலைவர்  என்று குறிப்பிடுகின்றனர். அப்படி என்றால்  அவர் ஒருவகையான சர்வாதிகாரியாக தான் இருக்க வேண்டும், ஜி ஜின்பிங் மட்டுமல்லாது எந்த ஒரு சீன ஆட்சியாளர்களையும் அமெரிக்க அரசாங்கம் இனி தனது ஆவணங்களில் கூட அதிபர் என்று  எழுதக் கூடாது என்றும், ஸ்காட் பாரி வலியுறுத்தியுள்ளார். நாம் அவரை ஜனாதிபதி என்று அழைக்கும் போது அது மற்றவர்களுக்கு, அவர் ஏதோ ஜனநாயக ரீதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது போல தோன்றக்கூடும் என அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. அவர் சீன கம்யூனிஸ்டு கட்சிக்கு தலைவராக இருக்கிறார் எனவே அவர் நாட்டின் முதன்மை ஆட்சியாளரே தவிர அவர் ஜனாதிபதி அல்ல என ஸ்கார்ட் பாரி வலியுறுத்தியுள்ளார்.