எகிப்து நாட்டைச் சேர்ந்த 500 கிலோ எடை கொண்ட பெண் இமான் அகமது உடல் எடை குறைப்பு சிகிச்சைக்காக, மும்பை மருத்துவமனைக்கு நேற்று கொண்டு வரப்பட்டார்.
இது குறித்து மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுவதாவது-
25 ஆண்டுகள்
எகிப்து நாட்டின் அலெக்ஸ்சான்ட்ரியா நகரைச் சேர்ந்தவர் இமான் அகமது(வயது36). இவர் உடல் பருமன் நோயால் அவதிப்பட்டு வந்ததால், எடை 500 கிலோவுக்கும் மேலாக அதிகரித்தது. இதனால், கடந்த 25 ஆண்டுகளாக படுக்கையில் படுத்தவாறே, வெளியே எங்கும் செல்லாமல் கிடக்கிறார். இந்நிலையில், இவரின் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கும் வகையில் அறுவை சிகிச்சை செய்ய, மும்பையில்உள்ள சைபி மருத்துவமனைக்கு அழைத்து வர முடிவு செய்யப்பட்டது.
பாதுகாப்பு
எகிப்து நாட்டில் இருந்து எகிப்து ஏர்வேஸ் மூலம் அழைத்து வரப்பட்ட இமான் அகமது, நேற்று காலை 4 மணிக்கு மும்பை விமான நிலையத்தை வந்தடைந்தார். அதன்பின் தனி டிரக் மூலம், போலீசார், ஆம்புலன்ஸ் பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
கிரேன்
இவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனையில் தனி அறை உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அறைக்கு இவரால் நடந்து செல்லமுடியாது என்பதால், படுக்கையில் படுத்தவாறு இருக்கும் இமானை, கிரேன் மூலம் தூக்கி, மருத்துவமனை வளாகத்துக்குள் கொண்டு சென்றோம்.
கண்காணிப்பு
மருத்துவமனையில் ஒரு மாத காலம் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, அதன்பின், இமானுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும். இப்போது, அறுவை சிகிச்சை மருத்துவர் முசாபால் லக்டாவாலா தலைமையிலான மருத்துவர்கள் கண்காணிப்பில் இமான் உள்ளார்.
ஆபத்தான சிகிச்சை
இவருக்கு செய்ய வேண்டிய அறுவை சிகிச்சை மிகவும் ஆபத்து நிறைந்தது என்பதால், மிகுந்த பாதுகாப்புடனே எகிப்து நாட்டில் இருந்துமும்பைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். ஏறக்குறைய 25 ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியே செல்லாமல், படுத்த படுக்கையாகரே இமான்இருக்கிறார். இமானுடன் அவரின் சகோதரி சைமா அகமதுவும் உடன் வந்தார். மேலும், எகிப்து நாட்டைச் சேர்ந்த 10 மருத்துவர்களும் உடன் வந்துள்ளனர்.
எகிப்தில் இருந்து மும்பைக்கு கொண்டு வருவதற்காக சிறப்பு படுக்கை, விமானப்பயணத்தில் உயிருக்கு ஆபத்து ஏதும் நிகழாமல் இருக்க மருத்துவக்குழுவும், மருத்துவ, உயிர்காக்கும் கருவிகளும் உடன் கொண்டு வரப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தனர்.
