பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் ரஷ்யாவின் தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து சந்தேகம் எழுப்பி வருகின்றனர். ஆனாலும் ரஷ்யா அவற்றையெல்லாம் புறக்கணித்து அதை அதிக அளவில் உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்து வருகிறது.  

உலகம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 8 மாதங்களாகின்றன, இதுவரை 2 கோடியே 17 லட்சம் பேர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில் வைரசுக்கு எதிராக மிகப்பெரிய வெற்றி என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகஸ்ட் 11ஆம் தேதி அன்று  பிரகடனம் செய்துள்ளார். அதாவது கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை தங்களது நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதாக புடின் அறிவித்துள்ளார்.

இந்த தடுப்பூசி இரண்டு மாதங்களுக்கும் மேலாக மனிதர்களுக்கு பரிசோதிக்கப்பட்டு, பாதுகாப்பு தரங்களையும் பூர்த்தி செய்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். இந்த தடுப்பூசிக்கு ரஷ்யாவின் சுகாதாரத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கேம்லியா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசி தனது மகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது என அவர் கூறியுள்ளார். இந்த தடுப்பூசி, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கமலேயாவுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த தடுப்பூசி ரஷ்யாவில் அதிக அளவில் மக்களுக்கு பயன்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  ரஷ்ய ஊடகங்களின் கூற்றுப்படி 2021 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்திற்கு முன்னர் தடுப்பூசி மற்ற நாடுகளுக்கும் கிடைக்குமென தெரியவந்துள்ளது.

அதேபோல் ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி, ஸ்புட்னிக்-வி என்ற இந்த தடுப்பூசியின் உற்பத்தி செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்படும் என்றும், உலகெங்கிலும் உள்ள சுமார் 20 நாடுகளில் இருந்து இந்த தடுப்பூசியை கேட்டு கோரிக்கைகள் வந்திருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. கோடிக் கணக்கானோர் இந்த தடுப்பூசியை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 500 மில்லியன் டோஸ் தயாரிக்க ரஷ்யா தயாராகி வருகிறது. இருப்பினும் விரைவான வேகத்தில் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா கூறியிருப்பது, விஞ்ஞானிகளை கலக்கமடைய செய்துள்ளது. உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட  உலகில் பல நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள், ரஷ்யா உருவாக்கியுள்ள தடுப்பூசிக்கு எதிராக வெளிப்படையாகவே கருத்து கூறி வருகின்றனர்.

இதனிடையே, கொரோனாவுக்கு எதிராக ரஷ்யா தடுப்பூசியை உருவாக்கி வருவது குறித்து அதிகாரப்பூர்வமாக  தங்களுக்கு எந்த தகவலும் சொல்லப்படவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதேபோல் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி உருவாக்க சர்வதேச வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு ரஷ்யாவுக்கு உலகச் சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. 

அதாவது இதுவரை உலக சுகாதார அமைப்பின் கவனத்திற்கு ஆறு தடுப்பூசிகள் மட்டுமே சோதனையில் இருந்து வருவதாக அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது. ஆனால் ரஷ்யாவின் தடுப்பூசி குறித்து தங்களுக்கு எந்த தகவலும் இல்லை என்றும், அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகின் பிற நாடுகளும் ரஷ்யாவின் தடுப்பூசி குறித்து தங்களது அச்சத்தை வெளிப்படுத்துகின்றன.  ரஷ்யா தயாரித்துள்ள இந்த தடுப்பூசியின் சோதனையில் கடைபிடிக்கப்பட்ட பாதுகாப்பு தரவுகள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

எனவே ரஷ்யாவின் கூற்று எந்த அளவிற்கு துல்லியமானது என்பதை மற்ற நாட்டு விஞ்ஞானிகள் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். ஆனால் ரஷ்யா, தனது தடுப்பூசி குறித்து சர்வதேச நாடுகள் எழுப்பும்  சந்தேகங்களை நிராகரித்து வருவதுடன், அந்நாடுகளின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என தெரிவித்துள்ளது. அதேபோல் ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் ரஷ்யாவின் தடுப்பூசி குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு பிற நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் ரஷ்யாவின் சுகாதார துறை அமைச்சர் மிகைல் முராஷ்கோ,  ரஷ்ய செய்தி நிறுவனமான இன்டர்ஃபாக்ஸிடம், ரஷ்யா மருத்துவ போட்டியில் முன்னிலையில் இருப்பதன் விவரத்தை அயல்நாடுகள் நன்கு அறிந்திருக்கின்றன என கூறியுள்ளார். அதேபோல் ரஷ்ய தடுப்பூசி குறித்து அவர்கள் முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர் என அவர் கூறியுள்ளார்.

அதேபோல் அமெரிக்க நாட்டின் மிகப்பெரிய வைரஸ் விஞ்ஞானி டாக்டர் அந்தோணி பாசியும் ரஷ்யாவின் தடுப்பூசி குறித்து பல சந்தேகங்களை எழுப்பியுள்ளார். இந்த தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்பதை ரஷ்ய மக்கள் உண்மையிலேயே சோதித்தார்களா என்பதை நான் அறிய விரும்புகிறேன். அவர்கள் இதைச் செய்திருப்பார்களா என்பதை நான் சந்தேகிக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

ரஷ்யாவின் இந்த தடுப்பூசியை தவிர கொரோனாவுக்கு எதிராக தற்போது உலகளவில் 23 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் சில மட்டும் சோதனையின் மூன்றாவது மற்றும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விஞ்ஞானிகள் இதுவரையிலும் அதன் வெற்றிக்காக காத்திருக் கின்றனர். இவற்றில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம். மாடர்னா பார்மசூட்டிக்கல், சீன மருந்து நிறுவனமான  சினோவாக் பயோடெக், உள்ளிட்ட தடுப்பூசிகள் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றன.