2nd Largest Diamond | உலகின் 2வது மிகப் பெரிய வைரம் கண்டுபிடிப்பு!
119 ஆண்டுகளுக்குப் பிறகு போட்ஸ்வானாவில் உள்ள வைரச் சுரங்கம் ஒன்றிலிருந்து உலகின் இரண்டாவது பெரிய வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பூமியில், நிலத்தடியில் அதிக அழுத்தத்தின் கீழ் கார்பன் அணுக்கள் ஒன்றோடு ஒன்றாக அழுத்தும்போது வைரங்கள் உருவாகின்றன. பெரும்பாலான வைர கற்கள் ஒரு பில்லியன் ஆண்டுகள் பழமையானது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. தற்போது வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சில வைர கற்கள் 3 பில்லியன் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை என என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
உலக வல்லரசான ரஷ்யாவிற்கு அடுத்தப்படியாக வைரங்களை வெட்டி எடுப்பதில் தென்னாப்பிரிக்காவின் போட்ஸ்வானா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், போட்ஸ்வானாவிலிருந்து சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கரேவ் சுரங்கத்தில் அண்மையில் 2,492 காரட் வைரக்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது, உலகின் 2வது மிகப் பெரிய வைரம் என சொல்லப்படுகிறது. இது சந்தை மதிப்பில் 350 கோடி ரூபாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பெரிய வைரக்கல்லை, போஸ்ட்வானா அதிபர் மொக்விட்சி மசிசி, பார்வையிட்டு இதுவே உலகின் 2வது பெரிய வைரக்கல் என அறிவித்தார். இதற்கு முன்பு சுமார் 119 ஆண்டுகளுக்கும் முன்பு 1905-ம் ஆண்டு இதே தென்னாப்பிரிக்காவில் 3,106 காரட் வைரக்கல் கண்டுபிடிக்கப்பட்டது. அதுவே தற்போது வரை உலகின் மிகப் பெரிய வைரமாக அறியப்படுகிறது.
தற்போது கிடைத்த 2வது பெரிய வைரக்கல்லிற்றகு இதுவரை எந்த பெயரும் வைக்கப்படவில்லை. இந்த வைரக்கல் மதிப்பிடுவது அல்லது எப்படி வெட்டி பிரித்து விற்கப்படும் என்பதை விரைவில் முடிவு செய்வதாக சுரங்க அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வைரக்கல், பெரிய வைரங்களைக் கண்டுபிடிப்பதற்காகவே வடிவமைக்கப்பட்ட எக்ஸ்ரே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த 2வது பெரிய வைரத்தை கண்டுபிடித்த கனடா நாட்டு சுரங்க நிறுவனமான Lucara Diamond Corp-ன் போட்ஸ்வானா நிர்வாக இயக்குநர் நசீம் லஹ்ரி, "இந்த 2வது பெரிய வைரம் ஒரு வரலாற்று கண்டுபிடிப்பு” எனக் தெரிவித்துளார்.
லுகாரா தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான வில்லியம் லாம்ப், "இந்த அசாதாரண 2,492 காரட் பெரிய வைரத்தை கண்டுபிடித்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.