பிளாட்பார்மில் இருந்து ஓடும் ரெயிலின் கீழ் விழுந்த பெண்.. உயிர் பிழைத்ததும் என்ன சொன்னார் தெரியுமா?
எனக்கு முன்னாடி இருந்த நபரை எச்சரிக்க முயற்சித்தேன், ஆனால் அதன் பின் என்ன நடந்தது என்று எனக்கு நினைவில்லை என கேண்டலா தெரிவித்தார்.
ரெயில்வே நிலையங்களில் அவ்வப்போது அசம்பாவிதங்கள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. பல சந்தர்ப்பங்களில் படுகாயம், உயிரிழப்பு உள்ளிட்டவை ஏற்பட்டாலும் சமயங்களில் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும் படியான சம்பவங்களும் அரங்கேற தான் செய்கின்றன.
சமீப காலங்களில் இது போன்ற சம்பவங்கள் அதிகரிப்பதோடு, இவற்றின் வீடியோக்களும் எப்படியோ இணையத்தில் வெளியாகி, வைரல் ஆகிவிடுகின்றன. அந்த வகையில் பிளாட்பார்மில் நின்று கொண்டிருந்த பெண், திடீரென மயங்கி ஓடும் ரெயிலின் கீழ் விழுந்து, உயிர் பிழைத்த சம்பவங்கள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அசம்பாவிதம்:
அர்ஜெண்டினாவின் பினோஸ்ஏரிஸ் பகுதியின் இண்டிபெண்டன்ஸ் ரெயில் நிலையத்தின் பிளாட்பார்மில் தனது ரெயிலுக்காக கேண்டலா காத்துக் கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் ஒன்று கடந்து சென்றது. நல்ல உடல்நலத்துடன் ரெயில் நிலையத்துக்கு வந்த போதும், கேண்டலாவுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால் நிலை தடுமாறிய கேண்டலா, எதிரில் வந்த ரெயில் ஒன்றின் கீழ் விழுந்து விட்டார்.
அபாய கட்டம்:
ஓடும் ரெயிலின் கீழ் பெண் விழுவதை பார்த்ததும், அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் கூச்சல் இட்டனர். மேலும் ரெயிலினுள் இருந்தவர்கள் அபாய சங்கிலியை இழுத்துப் பிடித்து ரெயிலை நிறுத்தினர். ரெயில் நின்றதும் தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்ட கேண்டலா, உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் கேண்டலாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவர், அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் என தெரிவித்தனர்.
ஒன்னும் புரியவில்லை:
"இன்னும் எப்படி உயிருடன் இருக்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை. என்ன நடந்தது என்பதை இன்னும் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். எனக்கு திடீரென இரத்த அழுத்தம் குறைந்து விட்டது, இதனால் நான் மயங்கி விட்டேன். எனக்கு முன்னாடி இருந்த நபரை எச்சரிக்க முயற்சித்தேன், ஆனால் அதன் பின் என்ன நடந்தது என்று எனக்கு நினைவில்லை." என கேண்டலா தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
சம்பவங்கள்:
கடந்த மாதம் குஜராத் மாநிலத்தின் சூரத் ரெயில் நிலையத்தின் பிளாட்பார்மில் இருந்து ரெயிலின் முன் விழ இருந்த நபர் காப்பாற்றப்பட்ட சம்பவம் அரங்கேறியது. ரெயிலில் இருந்து இறங்க முயற்சிக்கும் போது இந்த சம்பவம் நடைபெற்றது. இதே போன்று பிப்ரவரி மாத வாக்கில் மத்திய பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் டெல்லி மெட்ரோ ரெயிலில் விழ இருந்த நபரை சாமர்த்தியமாக காப்பாற்றினார்.