மோடியை தனது 'பாஸ்' என்று ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் குறிப்பிடக் காரணம் என்ன?
இந்தியப் பிரதமர் மோடியை தனது 'பாஸ்' என்று ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி ஜப்பான், பப்புவா நியூ கினியா பயணத்துக்குப் பின்னர் நேற்று ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னி சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பை ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்கள் அளித்து இருந்தனர்.
இன்று இந்திய வம்சாவழியினர் இடையே மோடி மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் இருவரும் சிட்னியில் பேசினர். சிட்னியில் குடோஸ் பாங்க் பகுதியில் நடந்த கூட்டத்தில் சுமார் 20,000 பேர் கூடி இருந்தனர். அப்போது ஆண்டனி அல்பானீஸ் பேசுகையில், ''இதற்கு முன்பு இந்த ஸ்டேஜில் புருஸ் ஸ்பிரிங்டீன் தோன்றி இருந்தார். அவருக்கு வராத கூட்டம் பிரதமர் மோடிக்கு கூடியுள்ளது. பிரதமர் மோடி தான் என்னுடைய பாஸ்.
சிட்னிக்கு பிரதமர் மோடி வருவதை முன்னிட்டு விமானங்கள் மூலம் வானில் வெல்கம் மோடி வரவேற்பு!!
ஒரு வருடத்திற்கு முன்பு நான் பிரதமராக பதவியேற்றதில் இருந்து இது எங்களது ஆறாவது சந்திப்பாக உள்ளது. இது ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு எவ்வளவு முக்கியமானது என்பதைக் காட்டுகிறது. இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக வளரும். ஏற்கனவே இந்தியா உலக அளவில் பிரபலமான நாடாக இருக்கிறது. மேலும் இது இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு முக்கியமான அண்டை நாடு. இதனால் தான் முதலீடு செய்வதும் தேவை என்பதை உணர்ந்து இருக்கிறோம்.
புலம்பெயர்ந்த இந்தியர்களின் பங்களிப்பால் ஆஸ்திரேலியா சிறந்த இடமாக உள்ளது. ஆஸ்திரேலியாவின் முக்கிய கூட்டாளியாக இந்தியா உள்ளது. இருநாடுகளுக்கு இடையே வளமான நட்பு உள்ளது. நாம் இருவரும் அன்பான விளையாட்டு எதிரிகளும் கூட. உலக கிரிக்கெட் மைதானத்தில் மீண்டும் சாம்பியன்ஷிப் போட்டியிடுவோம்'' என்றார்.
முன்னதாக, இரு நாட்டுப் பிரதமர்களும் விழா நடைபெறும் இடத்திற்கு வந்ததும், பிரதமர் மோடிக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய நடனக் கலைஞர்களின் கலாச்சார நிகழ்ச்சியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. பிரதமர் மோடிக்கு முன்பாக பேசிய ஆண்டனி அல்பானீஸ், நிகழ்ச்சிக்குப் பிறகு திட்டமிடப்பட்ட பிரதமர் மோடியுடனான தனது இருதரப்பு சந்திப்பு குறித்து பேசினார்.