உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட போகிறவர்களின் எண்ணிக்கை இன்னும் சில நாள்களில் 10 லட்சத்தை தாண்டும் என உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானோம் கெப்ரியேஸஸ், ‘கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி 4 மாதங்கள் ஆகியுள்ளன. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது கவலையாகவும், பயமாகவும் உள்ளது. கடந்த 5 வாரங்களில் கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவி வருகிறது. உயிரிழப்புகளும் இருமடங்கு அதிகரித்துள்ளது.

புதன்கிழமை நிலவரப்படி 47,241 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல 9,35,840 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் சில தினங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தையும் தொடும் என அஞ்சுகிறேன்.

இதுவரை 205 நாடுகளுக்கு வைரஸ் பரவிவிட்டது. அதை முன்னிட்டு, பல்வேறு நலத் திட்டங்களை அறிமுகம் செய்யும்படி  உலக அரசாங்கங்களைக் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக, முடக்கப்பட்டுள்ள நாடுகளில் உள்ள வசதி குறைந்தோருக்கும் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கும் உதவிக் கரம் நீட்ட வேண்டும்.

வளர்ந்து வரும் நாடுகளில் COVID-19 கொள்ளை நோயின் தாக்கம் மேற்கத்திய நாடுகள், சீனா ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் குறைவாகதான் உள்ளது. எனினும், கிருமிப் பரவல் அங்கு அதிகரித்தால், நிலைமையைச் சமாளிக்க அந்த நாடுகள் திணறிவிடும். உரிய பரிசோதனைகளை மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி அவர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்கான வசதிகளை வளர்ந்து வரும் நாடுகள் கொண்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ என்று அவர் கோரினார்.