ஒரு வாரத்தில் மட்டும் 71 சதவீதம் அதிகரித்த கொரோனா.. WHO எச்சரிக்கை.. மிரள வைக்கும் அறிக்கை..

உலக அளவில் கொரோனா தொற்று கடந்த வாரத்தில் மட்டும் திடீரென 71 சதவீதம் அதிகரித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதேசமயம், உயிரிழப்பு 10 சதவீதம் குறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
 

WHO statement corona virus

உலக சுகாதார அமைப்பு 2021 டிசம்பர் 27-ம் தேதி முதல் 2022 ஜனவரி 2-ம் தேதி வரையிலான உலக அளவிலான கொரோனா தொற்று குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த வாரத்தில் உலக அளவில் கொரோனா பரவல் திடீரென 71 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம், உயிரிழப்பு 10 சதவீதம் குறைந்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து உலக அளவில் கொரோனா தொற்று மெல்ல அதிகரித்து வந்தாலும் பெரிதான உயர்வு ஏதுமில்லை. ஆனால், கடந்த வாரத்துக்கு முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில் கடந்த வாரம் 71 சதவீதம் திடீரென தொற்று அதிகரித்துள்ளது. அதேசமயம், கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு 10 சதவீதம் குறைந்துள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் உலக அளவில் புதிதாக 95 லட்சம் பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பின் வாராந்திர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், ஜனவரி 2-ம் தேதி நிலவரப்படி, உலக அளவில் மொத்தம் 28.90 கோடி பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 54 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இதில் அமெரிக்காவில் மட்டும் கடந்த வாரத்தில் கொரோனா தொற்றானது 100 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தென்கிழக்கு ஆசியப் பகுதியில் 78 சதவீதமும், ஐரோப்பிய மண்டலத்தில் 65 சதவீதமும், கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் 40 சதவீதமும், மேற்கு பிசிபிக் பகுதியில் 38 சதவீதமும், ஆப்பிரிக்காவில் 7 சதவீதமும் கொரோனா அதிகரித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு  தெரிவித்துள்ளது.

இதனிடையே இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து17 ஆயிரத்து100 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.மேலும் நாட்டில் இதுவரை 3 ஆயிரத்து 7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டு வருகின்றன. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,52,26,386 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்த வரை ஒரு நாள் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் 6,983 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.நேற்று முந்தினம் ஒரு நாள் பாதிப்பு 4,862 ஆக இருந்த நிலையில் கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை மேலும் 2,121 அதிகரித்து 6,983 ஆக பதிவானது. சென்னையில் மட்டும் 3,759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios