162 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட குடியரசுக் கட்சி சார்பில் அரசியல் அனுபவமே முற்றிலும் இல்லாத ஒருநபர் முதல்முறையாக அதிபராக வர இருக்கிறார் என்றார் அது டொனால்ட் டிரம்ப்.
அமெரிக்காவின் 45-வது அதிபராக 2017-ம் ஆண்டு ஜனவரி 20-ந்தேதி பொறுப்பு ஏற்க உள்ள டொனால்ட் ஜான் டிரம்ப் வசதியான குடும்பத்தில் பிறந்தவர்.
நியூயார்க் நகரில் உள்ள குயின்ஸ் பகுதியில் கடந்த 1946-ம் ஆண்டு ஜூன் 20-ந்தேதி தொழிலதிபர் பிரட் டிரம்ப், மேரி டிரம்ப் ஆகியோருக்கு 4-வது மகனாக டொனால்ட் டிரம்ப் பிறந்தார். டிரம்பின் தந்தை ஜெர்மனி வழியைச் சேர்ந்தவர், தாய் ஸ்காட்லாந்து வழியைச் சேர்ந்தவர்.

நியூயார்க்கில் உள்ள மிலிட்டரி அகாதெமியில் பள்ளிப்படிப்பை முடித்த டிரம்ப், பொருளாதாரத்தில் இளநிலை பட்படிப்பை முடித்தவர். கடந்த 1968-ம் ஆண்டு பென்சில்வேனியா வார்டன் பல்கலையில் இந்த பட்டப்படிப்பை டிரம்ப் முடித்தார்.
டிரம்ப் தனது முதல் இரு மனைவிகளா இவானா, மர்லா ஆகியோரை விவாகரத்து செய்துவிட்டு, கடந்த 2005-ம் ஆண்டு மூன்றாவதா மிலனியாவை திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கு டொனால்ட் டிரம்ப் ஜூனியர், இவாங்கா, எரிக், டிப்பானி, பேரான் ஆகிய 5 பிள்ளைகள் உள்ளனர்.
அதன்பின், தனது தந்தையிடம் 10 லட்சம் டாலர்கள் கடன் பெற்று, தனியாக ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தை டிரம்ப் தொடங்கினார். அதேசமயம், தனது நிறுவனத்தை நடத்திக்கொண்டே, தனது தந்தையின் நிறுவனத்துக்கும் உதவி செய்து, அவரின் வீடுகட்டும் திட்டங்களுக்கு உதவி செய்து வந்தார். அதன்பின் கடந்த 1971-ம் ஆண்டு தனது நிறுவனத்தின் பெயரை ‘டிரம்ப் ஆர்கனைஷேசன்’ என மாற்றினார்.
காலங்கள் உருண்டோட அமெரிக்காவில் குறிப்பிடத்தகுந்த தொழில் அதிபராக டிரம்ப் வலம் வந்தார். இப்போது நியூயார்க் நகரில் டிரம்ப்புக்கு சொந்தமாக டிரம்ப் டவர் ஓட்டல், டிரம்ப் பேலஸ், டிரம்ப் வேர்ல்ட் டவர், டிரம்ப் இன்டர்நேஷனல் ஓட்டல், டவர் ஆகியவை மிகவும் பிரபலமாக இருக்கின்றன. மேலும், மும்பை, இஸ்தான்புல், பிலிப்பைன்ஸ் நாடுகளிலும் டிரம்புக்கு நட்சத்திர சொகுசு ஒட்டல்கள் உள்ளன.

உலகின் பல நாடுகளில் டிரம்புக்கு சொத்துக்களும், செல்வங்களும் குவிந்து இருந்ததால், அதற்கு ஏற்றார்போல், ஒரு பிளேபாய் போலவே டிரம்ப் வலம் வந்தார். அதுமட்டுமல்லாமல், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்துவது, பல சர்வதேச நிகழ்ச்சிகளையும் டிரம்ப் தனது நிறுவனம் மூலம் நடத்தி வந்தார். குறிப்பாக கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டுவரை மிஸ் யுனிவர்ஸ், மிஸ் அமெரிக்கா, மிஸ்டீன் அமெரிக்கா உள்ளிட்ட அழகிகளை தேர்வு செய்யும் நிகழ்ச்சிகளை டிரம்ப் நடத்தி வந்தார்.

ஒரு நேரத்தில் அதிபர் தேர்தலில் நிற்பவர்களை கிண்டல் செய்து வந்த டிரம்ப், கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு அதிபர் தேர்தல் வேட்பாளர்களுக்கான போட்டியில் களமிறங்கினார். ஜெப்புஷ் உள்ளிட்ட 17 வேட்பாளர்களைக் தோற்கடித்து கடந்த ஜூன்மாதம் முறைப்படி அதிபர் வேட்பாளராக டிரம்ப் தேர்வானார்.

அமெரிக்காவை மீண்டும் புகழ்பெறச்செய்வோம் என்ற கோஷத்தை முன்வைத்து டிரம்ப் நாடுமுழுவதும் தீவிரப் பிரசாரம் செய்து வந்தார். அமெரிக்காவில் சமீபக காலமாக அதிகரித்த தீவிரவாத தாக்குதல்கள், அகதிகள் வருகை ஆகியவற்றில் சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி உலகத்தின் கவனத்தை டிரம்ப் ஈர்த்தார்.
முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கள், மெக்சிக்கோ-அமெரிக்க எல்லையில் சுவர் எழுப்புதல் ஆகியவற்றை கூறி இனவெறியைத் தூண்டு கருத்துக்களைக் கூறினார். இவருக்கு எதிராக எதிர்க்கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் கடுமையாகப் பிரசாரம் செய்தும் அதை டிரம்ப் முறியடித்தார்.
தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன், பல பெண்கள் டிரம்ப் மீது செக்ஸ் குற்றச்சாட்டுகளை கூறினர். இதனால், டிரம்ப் போட்டியில் இருந்து விலகிவிடுவார் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், அனைத்துக்கும் அசைந்து கொடுக்காமல், தனது பிடியில் உறுதியாக டிரம்ப் உறுதியாக இருந்தார்.
ஏராளமான கருத்துக்கணிப்புகளிலும் ஹிலாரியே முன்னிலை வகித்து வந்த போதிலும், டிரம்ப் அது கண்டு மனம் தளரவில்லை. தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று கடைசி வரை கூறிய டிரம்ப், தான் கூறியது போல் வெற்றி பெற்று அதிபராகியுள்ளார்.
