ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின்  தலைவன் அல் பாக்தாதியை  காட்டிக்கொடுத்த உளவாளிக்கு 25 மில்லியன் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 177 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அமெரிக்கா வழங்க உள்ளது.  அமெரிக்காவால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடனை அடுத்து  பயங்கரவாத அமைப்பு  தலைவர்களுக்கெல்லாம் தலைவராக விளங்கியவர் அல் பாக்தாதி. அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்துவந்தார். இந்நிலையில் பாக்தாதியை தீர்த்துக்கட்ட அமெரிக்கா களம் இறங்கியது,  பாக்தாதி குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 177 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என ஏற்கனவே அமெரிக்கா அறிவித்திருந்தது. இந்நிலையில் பாக்தாதி சிரியாவின் குகைகளில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என ஆரம்பத்தில் தகவல் கிடைத்தது.  

இதற்கிடையில் பாக்தாத் தொடர்பாக அமெரிக்க ராணுவத்திற்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது . அதில் அல் பாக்தாதி இருக்குமிடத்தை தெரிந்துகொண்ட அமெரிக்க ராணுவம்,  சிரியாவின் இட்லிப் நகரில் அவர் பதுங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்தது.  மோப்ப நாய்களுடன் அங்கு எலிகாப்டரில் இறங்கிய அமெரிக்கா அதிரடிப்படையினர் பாக்தாதி தப்பிக்க முடியாதபடி சூழ்ந்தனர். அமெரிக்க இராணுவத்திடம் தப்பிக்க முடியாமல் ரகசிய அறைகளுக்கு பதுங்க  ஓடிய பாக்தாதி ஒரு கட்டத்தில் அமெரிக்க ராணுவத்திடம்,  தன்னை விட்டுவிடும்படி கதறி அழுததாகத் தெரிகிறது. ஒரு கட்டத்தில் தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்து அவர் தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவரது மகன்கள் மூவர் பலியாகி விட்டதாகவும் அமெரிக்க ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இதை உறுதி செய்ததுடன் பாக்தாதி,  ஒரு கோழையைப் போல நடுங்கி ஓடியதுடன்,  ஒரு நாயைப் போல கொஞ்சி கதறி அழுதார் என பாக்தாதியின் மரணம் குறித்து  தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில்  அல் பாக்தாதியை காட்டிக்கொடுத்த நபர் பற்றிய விவரங்களை வெளியிட அமெரிக்க  அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.  அந்நபர் பாக்தாதியின் அசைவுகளை நன்கு அறிந்திருந்தார் எனவும்  பாக்தாதி தங்கியிருந்த கட்டிடத்தை காட்டிக் கொடுத்தவர் அவர்தான் என்பதால்,  பாக்தாதி எந்த அறையில் பதுங்கியிருந்தார் என்பதுவரை அந்த நபருக்கு தெரியும் என்று மட்டும் கூறியிருந்தனர்.  அந்த  ரகசிய உளவாளிக்கு அமெரிக்க அரசு ஏற்கனவே அறிவித்தபடி 177 கோடி ரூபாய் பரிசுத்தொகையை வழங்க உள்ளது. இந்நிலையில் காட்டிக்கொடுத்த உளவாளி சன்னி அரபி எனவும் அவருடைய உறவினர் ஒருவரை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதற்கு பழிவாங்கும் வகையில் அவர் பாக்தாதியை காட்டி கொடுத்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.