அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பின் பின்னணி குறித்து பார்க்கலாம்.

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று போர் தொடங்கியது. இப்போது மூன்றாண்டுகளை கடந்து விட்டது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனும் ஓரளவு பதில் தாக்குதல்களை கொடுத்து வருகிறது. 

அமெரிக்காவை பொறுத்தவரை இந்த போரில் முதலில் உக்ரைனுக்கு ஆதரவு கொடுத்தது. அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனுக்கு ஆயுத உதவி, பொருளாதார உதவிகள் செய்து வந்தன. ஆனால் டொனால்ட் டிரம்ப் அதிபராக வந்ததும் நிலைமை தலைகீழாக மாறியது. உக்ரைனுக்கு நிதி வழங்குதை அதிரடியாக நிறுத்திய டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் கைகோர்த்தார். மேலும் உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்கா, ரஷ்யா வெளியுறவுத்துறை அதிகாரிகள் ரஷ்யாவில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இந்த பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய நாடுகளுக்கும், உக்ரைனுக்கும் அமெரிக்கா அழைப்பு விடுக்கவில்லை. நாங்கள் இல்லாமல் நடக்கும் பேச்சுவார்த்தை முடிவுகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த விஷயத்தில் ஐரோப்பிய நாடுகளை கழட்டிவிட்ட டிரம்ப், அந்த நாடுகள் மீது அதிக விரி விதிக்க உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்தார். இதனால் அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே மோதல் உருவாகி உள்ளது.

உக்ரைன் போர் தீர்மானத்தில் ரஷ்யாவுடன் கைகோர்த்த அமெரிக்கா!

இந்த பரபரப்பான சூழ்நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், அமெரிக்க அதிபர் டொனாலட் டிரம்பை சந்தித்து பேசியுள்ளார். அப்போது இருவரும் உக்ரைன், ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளனர். ​​உக்ரைனில் ரஷ்யாவின் போர் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது என்று டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார். 

இதற்கு பதிலளித்த இம்மானுவேல் மேக்ரான், 'உக்ரைன் ரஷ்யா போர் பேச்சுவார்த்தையில் முன்னேற்றப்பாதை உள்ளதை பார்க்கிறோம். ஆனால் ரஷ்யாவுடன் எந்தவொரு சாத்தியமான ஒப்பந்தமும் உக்ரைனுக்கு சரணடைவதற்கு சமமாக இருக்கக்கூடாது''என்று தெரிவித்தார். இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது டிரம்பின் ஒரு கருத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த இம்மானுவேல் மேக்ரான் குறுக்கிட்டு பேசினார்.

அதாவது ஐரோப்பா உக்ரைனுக்கு கடன்களை மட்டுமே வழங்குவதாகவும், பணத்தை திரும்பப் பெறுவதாகவும் டொனால்ட் டிரம்ப் கூறினார். இதற்கு இடைமறித்து பேசிய இம்மானுவேல் மேக்ரான், ''இல்லை, உண்மையில். வெளிப்படையாகச் சொல்வதானால், நாங்கள் பணம் செலுத்தினோம். மொத்த முயற்சியில் 60 சதவீதத்தை நாங்கள் செலுத்தினோம். இதில் தெளிவாக இருக்க வேண்டும்'' என்று தெரிவித்தார். 

மேக்ரான் பேசி முடித்ததும் ட்ரம்ப் சிரித்துக்கொண்டே, "நீங்கள் அதை நம்பினால், எனக்கு பரவாயில்லை" என்று கூறினார். இந்த பேச்சுவார்த்தையின்போது புதினை சர்வாதிகாரி என கூற மறுத்த டிரம்ப், ரஷ்யா-உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் நம்பிக்கை இருப்பதாகவும், அடுத்த இரண்டு வாரங்களில் வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வருவார் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்ற பிறகு சந்தித்த முதல் ஐரோப்பிய நாடுகளின் தலைவர் இம்மானுவேல் மேக்ரான் என்பது குறிப்பிடத்தக்கது.

எலான் மஸ்குக்கு எதிராக ஒன்று திரண்ட கனடா மக்கள்! கனடா குடியுரிமையை ரத்து செய்ய மனு! ஏன்?