ஆப்கானிஸ்தாகில் தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் திருமண வீட்டில் இருந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 40 பேர் பரிதாபமாக உடல்சிதறி உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டு மேற்கு பகுதியில் தலிபான் தீவிரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய தீவிரவாத குழுக்களின் ஆதிக்கம் கடந்த சில மாதங்களாக மீண்டும் தலைதூக்கியுள்ளது. அவ்வப்போது நாட்டின் முக்கிய பகுதியில் தற்கொலைப்படை தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். தலிபான்கள் சில பகுதிகளை கைப்பற்றி அங்கு உள்ளூர் வரிவிதிப்பு உள்ளிட்ட நிர்வாகங்களை தங்கள் வசப்படுத்தி போட்டி அரசாங்கத்தையும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் தெற்கு ஹெல்மன்ட் மாகாணத்தில் தீவிரவாதிகளை குறிவைத்து நடந்த தாக்குதலில் ஒரு திருமண வீட்டில் இருந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 40 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் சிலர் காயம் அடைந்துள்ளனர். 

தெற்கு ஹெல்மன்ட் மாகாணத்துக்குட்பட்ட முசா காலா மாவட்டத்தில் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக சிறப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அம்மாவட்டத்துக்கு ராணுவ வீரர்கள் விரைந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பாக அமெரிக்க போர் விமானங்களும் சென்றன. நேற்றிரவு அப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு திருமண வீட்டில் இருந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஆப்கானிஸ்தான் நாட்டின் நாடாளுமன்ற தேர்தல் வரும் 28-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தீவிரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் போலீசார் ஆகியோரை கொண்ட தீவிரவாத ஒழிப்பு கூட்டுப்படைகளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.