உலகில் இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு மிக சக்தி வாய்ந்த அணு ஆயுதத்தை உருவாக்கி உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஹிரோஷிமா அணுகுண்டை விட சக்தி வாய்ந்த அணு ஆயுதத்தை உருவாக்கி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகமே கொரோனாவை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறது, உலக அளவில் 2.83 கோடிக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9.13 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இன்னும் சில நாட்களில் உலகளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டும் என அஞ்சப்படுகிறது.   2.34 கோடி பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பெரு உள்ளிட்ட நாடுகள் வைரஸ் தொற்றால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் இந்த வைரஸால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் மட்டும் இதுவரை 65 லட்சத்து 88 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1.96 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொற்றுநோய் கையாண்ட விதம் குறித்து அமெரிக்க பத்திரிக்கையாளர் பாப் உட்வர் என்பவர் புத்தகம் ஒன்று எழுதியுள்ளார். அதிலுள்ள சில தகவல்களை தனியார் தொலைக்காட்சி செய்தியாக வெளியிட்டுள்ளது. மேலும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜிம் மாட்டிஸ் ட்ரம்புக்கும் இடையையான தொடர்ப், மற்றும் 2019 டிசம்பர் முதல் 2020 ஜூலை வரை ட்ரம்புக்கும், பாப் உட்வர்டுக்கும் இடையிலான 18 ஆன்-ரெக்கார்டுகளை அடிப்படையாக கொண்டும் அந்த புத்தகத்தில் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. 

அதில் பாப் உட்வர்டிடம்  ட்ரம்ப் பேசுகையில்,  '' நான் அணு ஆயுதம் ஒன்றை உருவாக்கியுள்ளேன்,  இதற்கு முன்னர் எந்த நாட்டிலும் இல்லாத ஒரு ஆயுத அமைப்பு அது ஆகும்,  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் போன்றோர் கூட இதற்கு முன்னர் இப்படி ஒரு ஆயுதத்தை கேள்விப்பட்டிருக்க முடியாது. ஆக, அமெரிக்காவில் இருப்பது நம்பமுடியாத அளவிற்கு சக்தி வாய்ந்தது. அந்த ஆயுதம் பிப்ரவரி 18-ல் அமெரிக்க அணு ஆயுத களஞ்சியத்தில் சேர்க்கப்பட்டது. அதாவது ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது வீசப்பட்ட அணுகுண்டுகளை விட மிக அதிக ஆற்றல் கொண்டது என அவர் கூறியுள்ளார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.