பொதுவாகவே குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பரவாது என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது குழந்தைகளும் அந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அறிகுறிகள் தென்படாமலேயே குழந்தைகளை கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் கொரோனா நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என ஆராய்ச்சி யாளர்கள் எச்சரித்துள்ளனர் .கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை சுமார் 200க்கும் அதிகமான நாடுகள் வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 2.73 கோடிக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8.87 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 1.93 கோடி பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 

அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பெரு உள்ளிட்ட நாடுகள் வைரசால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் 64 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகிலேயே இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் 45 இலட்சத்துக்கும் அதிகமானோரும், பிரேசிலில் 41 லட்சத்துக்கும் அதிகமானொரும் வைரஸ் தொற்றால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். ரஷ்யாவில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  உலகளவில் இந்த வைரஸை கட்டுப்படுத்த எத்தனையோ முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தாலும், இந்த வைரஸ் கட்டுக்கடங்காமல் மக்களை கொத்துக் கொத்தாக தாக்கி வருகிறது. பிரத்தியேக தடுப்பூசி வந்தால் மட்டுமே இதை தடுக்க முடியும் என ஒட்டுமொத்த உலக நாடுகளும் தடுப்பூசி எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன. இந்நிலையில் அதற்கான ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மொத்தத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. பொதுவாகவே கொரோனா வைரஸ் குழந்தைகளுக்கு பரவாது என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அது குழந்தைகளையும் தாக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 

குழந்தைகள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே கொரோனா வைரஸ் பரவலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும், ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். கொரோனா வைரஸ் நோய் அறிகுறிகள் குழந்தைகளின் இதயத்தை கடுமையாக பாதிப்படையச் செய்யும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுவாக குழந்தைகளின் அழற்சி நோய் அறிகுறிகள் கொரோனா வைரஸ் உடன் இணைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களது இதயம் கடுமையாக பாதிக்கப்படலாம், இதன் மூலம் சில குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் கண்காணிப்பு தேவைப்படக் கூடிய அளவிற்கு அவர்களின் இதயத்தை சேதப்படுத்தும் நிலை உண்டாகும். 600க்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் அழற்சி நோய் அறிகுறிகள் குறித்து ஆய்வு செய்தபோது ஆரோக்கியமாக உள்ள குழந்தைகள் அறிகுறி இல்லாமல் மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு பிறகு அவர்களை வைரஸ் தொற்று தாக்குகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 

உலகம் முழுவதும் 662, அழற்சி நோய் அறிகுறியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற குழந்தைகளை ஆய்வு செய்தபோது அவர்களில் 71% பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். 60% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மோசமாக பாதிக்கப்பட்டு எட்டு நாட்கள் வரை மருத்துவமனையில் இருந்துள்ளனர். அதில் 90 சதவீத குழந்தைகளுக்கு இதயத்தை ஸ்கேன் செய்து பார்த்தபோது, அதில் 54 சதவீதம் பேருக்கு முடிவுகள் அசாதாரணமாக இருந்துள்ளது. 23.7 சதவீத குழந்தைகளுக்கு வயிற்று வலி அல்லது வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. 68 சதவீதம் குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.