இந்தியாவுடன் போரில் தோற்றால் சரணடைய மாட்டோம்... சாகும் வரை திருப்பியடிப்போம்... பாகிஸ்தான் பிரதமர் கர்ஜனை..!
ஜம்மு -காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏதுமில்லை. போருக்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
ஜம்மு -காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏதுமில்லை. போருக்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி ஆதரவு தேட பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. இது குறித்து பேசிய அவர், ‘’ இந்தியாவுடனான போர் சாத்தியம் என்று நம்புகிறேன். நான் ஒரு சமாதானவாதி. நான் போருக்கு எதிரானவன். போர்கள் எந்தவொரு பிரச்னையையும் தீர்க்காது என்று நம்புகிறேன். இரண்டு அணு ஆயுத நாடுகள் சண்டையிடும்போது அவர்கள் ஒரு வழக்கமான போர் என்பதை கடந்து அது அணுசக்தி யுத்தமாக முடிவடையும் சாத்தியம் உள்ளது. நினைத்துக் கூட பார்க்க முடியாதது.
ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து விட்டநிலையில் இனியும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் இல்லை. ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறிய வகையில் காஷ்மீரை இந்தியா தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளது.
இத்தகைய சூழலில் இந்தியாவுடனான நேரடி போருக்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் உறுதியாக நம்புகிறேன். ஒருவேளை அவ்வாறு நேரடி போரினால் பாகிஸ்தான் பின்னடைவை சந்திக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை. அப்படி ஒரு நிலை வந்தால் சரணடைவதைக் காட்டிலும் சுதந்திரத்துக்காக நாங்கள் சாகும் வரை போரிடுவோம்.
பாகிஸ்தான் எந்த சூழலிலும் போரை முதலில் தொடங்காது. ஜம்மு -காஷ்மீர் விவகாரம் உள்நாட்டு விவகாரம். அதில் பாகிஸ்தான் தலையிடக் கூடாது என்று இந்திய ஐ.நா கூட்டத்தில் தெரிவித்து விட்டது’’ என அவர் தெரிவித்தார்.