கென்யாவில் ஊரடங்கை மீறி சுற்றியவர்களுக்கு தர்ம அடி கொடுத்தார்களா காட்டுவாசிகள்? வைரலான வீடியோ.. உண்மை அறிவோம்
கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சமூக விலகலை வலியுறுத்தும் வகையில், கென்யாவில் யூடியூப் சேனல் உருவாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்திவிட்டது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுதும் காட்டுத்தீயாய் பரவி பேரிழப்புகளை ஏற்படுத்திவருகிறது. உலகளவில் 17 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளையே ஆட்டம் காணவைத்துவிட்டது கொரோனா.
கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள தனிமைப்படுதலும் சமூக விலகலுமே ஒரே வழி என்பதால் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்காக வெளியே வரலாம் என்ற வாய்ப்பை பயன்படுத்தி பலர் காரணமே இல்லாமல் பொறுப்பில்லாமல் பொதுவெளியில் சுற்றித்திரிவதை பார்க்க முடிகிறது. இந்தியாவில் ஊரடங்கை மீறி பொதுவெளியில் சுற்றுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வது, வழக்குப்பதிவு செய்வது, அபராதம் விதிப்பது ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
கொரோனாவால் ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்கள் எல்லாம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனாவின் தாக்கம் பெரியளவில் இல்லை. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் இதுவரை 189 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். .
இந்நிலையில், அந்நாட்டில் ஊரடங்கை போலீஸால் சரியாக நடைமுறப்படுத்த முடியாததால், அந்நாட்டு அரசு மாசாய் என்ற காட்டுவாசிகளை களமிறக்கி பொதுவெளியில் சுற்றுபவர்களுக்கு தர்ம அடி கொடுத்து ஊரடங்கை பின்பற்றவைத்ததாக ஒரு தகவலும் அத்துடன் ஒரு வீடியோவும் வைரலானது. அந்த வீடியோவில், மாசாய் இனத்தை சேர்ந்த ஒருவர், ஒரு மீட்டர் இடைவெளியை கடைபிடியுங்கள் என்று கூறி பொதுவெளியில் இருப்பவர்களை அடிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
இந்த வீடியோவை பலரும், கென்ய அரசுதான், மாசாய் இனத்தினரை களமிறக்கி ஊரடங்கை அமல்படுத்தியதாக நினைத்து சமூக வலைதளங்களில் பரப்பிவருகின்றனர். ஆனால் அது உண்மையாகவே, கென்யாவின் ஒரு யூடியூப் சேனல் ஒன்றின் சார்பில், உருவாக்கப்பட்ட Prank வீடியோ.. சமூக விலகலை வலியுறுத்தி உருவாக்கப்பட்டுள்ள அந்த வீடியோவை எண்டர்டெய்ன்மெண்ட் கேட்டகரியில் பதிவிட்டுள்ளனர். 7 நிமிடத்திற்கு மேலாக ஓடும் அந்த வீடியோவின் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே அடங்கிய பதிவுகளை எடிட் செய்து சமூக வலைதளங்களில், கென்ய அரசுதான் அவர்களை வைத்து ஊரடங்கை மீறியவர்களை அடித்து விரட்டியதாக தவறான தகவலை பரப்பிவருகின்றனர். அந்த முழு வீடியோ இதோ,
ஆனால் இந்த உண்மை தெரியாமல் பலரும் கென்ய அரசுதான் அவர்களை வைத்து ஊரடங்கை மீறியவர்களை அடித்து உதைத்து, ஊரடங்கை அமல்படுத்தியதாக பரப்பிவருகின்றனர்.
மாசாய் இன மக்கள் கென்யா உள்ளிட்ட சில ஆப்பிரிக்க நாடுகளின் காடுகளில் வசிக்கும் மக்கள். பொதுவாகவே தனித்துவமான பழக்கவழக்கங்களை கொண்டவர்கள் காடுகளில் வசிக்கும் பழங்குடிகள். இவர்களும் அப்படித்தான். தனித்துவமான பழக்கவழக்கங்களை கொண்ட மாசாய் இன மக்கள், கென்யாவில் மட்டும் 4 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.