Ukraine Russia War: தோட்டாவை தடுத்து நிறுத்தி உக்ரைன் வீரர் உயிரை காப்பாற்றிய செல்போன்- வைரலாகும் பரபர வீடியோ!
தன் உயிரை காப்பாற்றிய ஸ்மார்ட்போனினை பாக்கெட்டில் இருந்து எடுத்து மற்றொரு ராணுவ வீரரிடம் காண்பித்து, அதனை மீண்டும் தனது பாக்கெட்டில் வைத்து கொள்கிறார்.
உக்ரைன் ராணுவ வீரர் நூலிழையில் உயிர் தப்பும் பரபர காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. வீடியோவில் மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்த தோட்டாவை மொபைல் அசால்ட்டாக தடுத்து நிறுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் லைக்குகளை வாரி குவித்து வருகிறது.
போரின் போது ரஷ்ய வீரரால் சுடப்பட்ட உக்ரைன் வீரர், மொபைல் போன் காரணமாக காப்பாற்றப்பட்டார். 7.62 மில்லிமீட்டர் அளவு கொண்ட தோட்டாவையே தடுத்து நிறுத்திய மொபைல் போன் தான் இவர் உயிர் பிழைக்க மிக முக்கிய காரணமாக இருந்தது. ரஷ்ய வீரரின் தோட்டா அந்த மொபைல் போனிலேயே இருக்கிறது.
வைரல் வீடியோ:
ஸ்மார்ட்போன் என் உயிரை காப்பாற்றியது எனும் தலைப்பில் உக்ரைன் வீரர் சேதமைடந்த தனது போனின் புகைப்படத்தை டுவிட் செய்து இருக்கிறார். அதில் தோட்டா மொபைல் போனில் அப்படியே இருக்கிறது. ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளிடையேயான போர் முடிவுக்கு வரும் சாத்தியக் கூறுகளே இல்லை என்ற நிலையில், இந்த வீடியோ வெளியாகி உள்ளது.
வைரல் வீடியோ காட்சிகளின் படி "தன் உயிரை காப்பாற்றிய ஸ்மார்ட்போனினை பாக்கெட்டில் இருந்து எடுத்து மற்றொரு ராணுவ வீரரிடம் காண்பித்து, பின் அதனை பத்திரமாக தனது பாக்கெட்டில் மீண்டும் வைத்து கொள்கிறார்," இந்த வீடியோ பதிவாகி இருக்கும் வேளையிலேயே அந்த பகுதியில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்கிறது.
சிறப்பு ராணுவ ஆப்பரேஷன்:
கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது சிறப்பு ராணுவ ஆப்பரேஷனை மேற்கொள்வதாக ரஷ்யா அறிவித்தது. அன்று முதல் இன்று வரை இரு நாடுகள் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த போர் புதிய கட்டத்தை எட்டியுள்ளதாக ரஷ்யா அறிவித்து இருக்கிறது. அதன்படி உக்ரைன் நாட்டின் வளங்கள் அனைத்தையும் அழிக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது. மேலும் மரியபோலில் சண்டையிடும் உக்ரைன் வீரர்களுக்கு உடனடியாக சரணடையவும் ரஷ்யா கெடு விதித்து இருக்கிறது.
இத்துடன் உக்ரைனுக்கு ஆதரவாக செயல்படும் நேட்டோ நாடுகளை அச்சுறுத்தும் வகையில் போலாந்து எல்லையில் ரஷ்யா தாக்குதல் நடத்தி இருக்கிறது. ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா நாட்டுக்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருவதோடு, தடைகளையும் விதித்து வருகின்றன.