கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை தயாரிப்பதில் ஆராய்ச்சியாளர்கள் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளனர், ஆனாலும் 2021 ஆம் ஆண்டின் முதற்பகுதி வரை அதன் பயன்பாட்டை எதிர்பார்க்கமுடியாது என உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த WHO-வின் அவசர கால திட்டத்தின் தலைவர் மைக் ரியான் கூறியதாவது:- உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் covid-19க்கு எதிரான  தடுப்பூசிகளை தயாரிப்பதில் ஆராய்ச்சியாளர்கள் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஒருவேளை தடுப்பூசி வெற்றியடைந்தால் அதை உலகம் அனைத்துக்கும் நியாயமான முறையில் விநியோகிப்பதை உறுதி  செய்வதற்கான பணியில் WHO செயல்பட்டு வருகிறது. 

அதேநேரத்தில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வேண்டியதும் அவசியமாகிறது என ரியான் கூறியுள்ளார். உலகளவில் தடுப்பூசி ஆராய்ச்சிகள் இப்போது மூன்றாம் கட்ட சோதனைகளில் உள்ளன, அதில் இதுவரை எதுவும் தோல்வியுறவில்லை. பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் ஆராய்ச்சிகள் வெற்றிகரமாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தடுப்பூசிகள் மக்களின் பயன்பாட்டிற்கு அடுத்த ஆண்டின் முதல் பகுதியில் கிடைக்கப்பெறும் என ரியான் கூறினார். சாத்தியமான தடுப்பூசிகளுக்கான ஆராய்ச்சிகளை விரிவுபடுத்துவதிலும், உற்பத்தித் திறனை மேம்படுத்துவதிலும் WHO  தீவிரமாக செயல்பட்டு வருகிறது. உலகளவில் நன்மையை ஏற்படுத்தக்கூடிய தடுப்பூசி விவகாரத்தில் நியாயமாக இருக்க வேண்டும். 

உருவாக்கப்படும் தடுப்பூசிகள்  செல்வந்தர்களுக்கும் மட்டுமல்ல, அதேநேரத்தில்  ஏழைகளுக்கானது மட்டுமல்ல அது அனைவருக்கும் பொதுவானது. இந்நிலையில் பாதுகாப்பான மற்றும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டால் பைசர் இன்க் மற்றும்  ஜெர்மன் பயோடெக், பயோஎன்டெக் போன்ற நிறுவனங்களால் உருவாக்கப்படும் covid-19 தடுப்பூசியின் 100 மில்லியன் டோஸை வாங்க அமெரிக்க அரசு 1.95 பில்லியன் டாலர் செலுத்த திட்டமிட்டுள்ளதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் covid-19 சமூக பரவல் கட்டுப்படுத்தப்படும் வரை பள்ளிகளை திறப்பதில் நாடுகள் கவனமாக இருக்க வேண்டும். பல்வேறு நாடுகளில் தொற்று நோய் பரவி கொண்டிருக்கும்போதே பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் இதற்கான விவாதம் தீவிரமடைந்துள்ளது, மொத்தத்தில் நம் சமூகத்தின் நோயைத் தடுப்பதில்  WHO தீவிரமாக இருக்கிறது என தெரிவித்த ரியான், சமூகத்தில் நோய் பரவலை கட்டுப்படுத்தினால் நிச்சயம் நாம் பள்ளிகளை விரைவில் திறக்கலாம் என கூறியுள்ளார்.