கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இந்தக் கொடிய வைரசால் உலகம் முழுதும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலானோர் நோய் அறிகுறி இல்லாமலேயே பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களை கொரோனா தாக்கியிருப்பது அறியாமல் தொண்டை வலி, மூச்சு திணறல், போன்ற பிரச்சனைகள் காரணமாக பெரும்பாலான  இளைஞர்கள் மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் இருமல் சிரப்பு (டானிக்) எடுத்துக்கொள்கின்றனர். ஒரு வேலை அவர்களுக்கு கொரோனா இருக்கும்பட்சத்தில் மேலும் அவர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். உலகம் முழுதும் பரவியுள்ள இந்த வைரஸால் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அந்நாடுகள் தங்கள் குடிமக்களை பாதுகாக்க அத்தனை வசதிகளைச் செய்திருந்தும் கொரோனா அவர்களையும் பாதித்துவருகிறது.

இது ஒரு புதிய வகை வைரஸ் என்பதால் ஆரம்பத்தில் இது பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது, ஆனால் இன்று கொரோனா குறித்த தொடர்ச்சியாக பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் தொண்டை புண், சளி, இருமல் போன்றவற்றை போக்க சிரப்பு பயன்படுத்தும்போது அது அவர்கள் உடல் நிலை எவ்வாறு பாதிக்கப்படுகிறது என சோதித்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட குரங்குகளைக் கொண்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது, கொரோனாவால் பாதிக்கப்பட்ட குரங்குகளிடம் இருமல் சிரப்பு பயன்படுத்தப்பட்டதில் இந்த வைரஸ் மேலும் அதிகரித்தது கண்டறியப்பட்டது, எனவே மருத்துவரை கலந்தாலோசிக்காமல் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் இருமல் சிரப்பை பயன்படுத்தக்கூடாது என்பது மிக முக்கியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இருமல் சிரப் தயாரிக்க டெக்ஸ்ட்ரோமெத்தோர்பான் என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது, இந்த மருந்து காரணமாக கொரோனா நோயாளிகளின் பிரச்சினை குறைவதைவிட அதிகரிக்கவே செய்கிறது. இந்த மருந்தை உட்கொண்ட பிறகு அது செயல்படும் விதம் கொரோனாவை பன்மடங்கு அதிகரிக்க தூண்டுகிறது. 

இந்த மருந்தால் கொரோனா வைராஸ்  எண்ணிக்கை உடலில் வேகமாக அதிகரிக்க தொடங்குவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இது குறித்து தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள் இந்த மருந்தை உட்கொண்டால் வைரஸின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆனால் அது ஒவ்வொரு நோயாளிகளுக்கும் ஒரே மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என சொல்ல முடியாது என கூறியுள்ளனர். டெக்ஸ்ட்ரோமெத்தோர்பான் இருமல் பிரச்சனைக்கு உடனடி தீர்வு கொடுப்பதால் இருமல் சிரப் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும் இருமல் மற்றும் சளி, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு என்ன மாதிரியான மருந்துகளை உட்கொள்ள வேண்டும், என்னென்ன மருந்துகள் கொரோனாவை அதிகரிக்கிறது என்பது குறித்து தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.