கிழக்கு லடாக் எல்லைப்பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர், இச்சம்பவத்திற்கு அமெரிக்கா இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், அந்நாட்டின் உயர் செனட் உறுப்பினர் மிட்ச் மெக்கானெல் சீனாவை கடுமையாக விமர்சித்துள்ளார், மேலும் அமெரிக்காவின் நட்பு நாடுகளை சீனா குறிவைத்துவருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.  கடந்த மே-22 ஆம் தேதி பாங்கொங் த்சோ மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா அத்துமீறியதாக கூறி  சீனா எல்லையில் ராணுவத்தை குவித்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவும் ராணுவம் மற்றும் ராணுவ தளவாடங்களை குவித்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இருநாட்டுக்கும் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள இருநாடுகளும் முன்வந்த நிலையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் திங்கட்கிழமை இரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை  இந்தியப் படையினர் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, அதில் சீனர்கள் தாக்குதல் நடத்த ஏற்கனவே தயாராக இருந்ததால், பயங்கர ஆயுதங்களை கொண்டு இந்திய ராணுவ வீரர்களை கடுமையாக தாக்கினர். அதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதுவரை இல்லாத பேரிழப்பாக இந்த இது கருதப்படுகிறது.  இந்நிலையில் அமெரிக்கா ஏற்கனவே இந்தியாவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன், தனது ஆதரவையும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்திய எல்லையில் நடந்த தாக்குதல் சம்பவம் சீன ராணுவத்தின் திட்டமிட்ட செயல் என அமெரிக்க மூத்த செனட் உறுப்பினரும் பெரும்பான்மை தலைவராகவும் உள்ள மிட்ச் மெக்கானெல் சந்தேகம் எழுப்பியுள்ளார். மேலும்  சீன மக்கள் விடுதலை ராணுவம் இந்திய பகுதிகளை கைப்பற்றும் நோக்கத்தில் மிக மோசமான வன்முறையை தூண்டியிருப்பதாக தோன்றுகிறது,  1962-க்கு பிறகு இந்திய எல்லையில் இவ்வளவு பெரிய வன்முறையை அது நடத்தியுள்ளது என்ற அவர், செனட் சபையில் வெளியுறவு கொள்கை குறித்து உரை நிகழ்த்தினார்.

அதில், அமெரிக்காவின் நலன்களையும் அதன் நட்பு நாடுகளையும் சீனா அச்சுறுத்தி வருகிறது,  இரு அணுசக்தி நாடுகளுக்கு இடையிலான இந்த வன்முறையை உலகம் முழுவதும் கண்டிக்கிறது. பதற்றத்தை அடக்குவதில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம், அமைதி நிலவும் என்று நம்புகிறோம் என்ற அவர்,  சீனா தனது எல்லையில் உள்ள மக்களிடம் எந்த அளவிற்கு அட்டூழியங்களில் ஈடுபட்டுவருகிறது, உலக வரைபடத்தை சீனா சுயமாக தீர்மானிப்பது எப்படி.? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் சீன கம்யூனிஸ்ட் கட்சி தொற்றுநோயை மூடி மறைத்தது, ஹாங்காங்கில் உள்ள மக்களை துன்புறுத்தும் வகையில் நடந்து வருவதுடன், அந்தப்பகுதியில் கட்டுப்பாட்டையும், தன் தலையீட்டையும் உறுதிபடுத்தியுள்ளது. அதேபோல் ஜப்பானை தென்சீனக் கடல் பிராந்தியத்தில் மிரட்டியது, சீனாவின் போர் விமானங்கள் தைவானில் நான்கு முறை வட்டமடித்துள்ளது என்றார்.  இதற்கிடையில் இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜிம் பேங்க்ஸ்  இந்தியா சீனாவுடன் எடுத்துள்ள முடிவு சரியானது என வரவேற்றுள்ளதுடன், சீனாவால் இந்தியாவை அச்சுறுத்த முடியாது என்றும், இந்தியாவின் நடவடிக்கைகள் வலுவானது மற்றும் புத்திசாலித்தனமானது எனவும் கூறியுள்ளார்.