ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்காவும், உக்ரைனும் சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவ்ல் வெளியாகி உள்ளது. தங்களுக்கு அமைதியே முக்கியம் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். 

USA and Ukraine set to hold talks in Saudi Arabia: ர‌ஷ்யா-உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்காவும், உக்ரைனும் சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா உட்பட நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகக் கூறியுள்ளார். கூடிய விரைவில் அமைதி திரும்ப வேண்டும் என்பதே எனது நோக்கம் என்று அவர் தெரிவித்துள்ளார். 

அமைதியே எங்களுக்கு முக்கியம் 

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் ஜெலென்ஸ்கி வெளியிட்ட பதிவில், ரஷ்யாவுடன் அமைதியை ஏற்படுத்த கூட்டாளிகளுடன் இணைந்து நிறைய வேலைகள் செய்ய வேண்டியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

"நாங்கள் அமைதியை விரும்பும் நட்பு நாடுகளுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். அடுத்த வாரம் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவில் நிறைய வேலைகள் உள்ளன. அமைதியை விரைவுபடுத்தவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ஒரு கூட்டத்திற்கு தயாராகி வருகிறோம்," என்று ஜெலென்ஸ்கி எக்ஸ் தளத்தில் எழுதினார்.

மேலும், டிரம்ப் குழுவுடன் தீவிரமாகப் பேசி வருவதாகவும், கூடிய விரைவில் அமைதி திரும்ப வேண்டும் என்பதே முக்கிய நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார். உக்ரைன் ஒரு ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை உறுதியாகக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

ரஷ்யாவுக்கு எதிராக பொங்கிய டொனால்ட் டிரம்ப் 

முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுடன் போர் நிறுத்தம் மற்றும் இறுதி அமைதி ஒப்பந்தம் எட்டப்படும் வரை ரஷ்யா மீது பெரிய அளவிலான வங்கி தடைகள் மற்றும் வரிகளை விதிக்க தீவிரமாக பரிசீலித்து வருவதாகக் கூறினார்.

வெள்ளிக்கிழமை ட்ரூத் சோஷியலில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், "ரஷ்யா தற்போது போர்க்களத்தில் உக்ரைனைத் தாக்கி வருவதால், போர் நிறுத்தம் மற்றும் இறுதி அமைதி ஒப்பந்தம் எட்டப்படும் வரை ரஷ்யா மீது பெரிய அளவிலான வங்கி தடைகள் மற்றும் வரிகளை விதிக்க தீவிரமாக பரிசீலித்து வருகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார். ''நேரம் கடந்து போவதற்குள் ரஷ்யா மற்றும் உக்ரைன் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்'' என்று அவர் மேலும் கூறினார்.

அமெரிக்கா, உக்ரைன் பேச்சுவார்த்தை

அல் ஜசீரா செய்தி நிறுவனத்தின் தகவல்படி, உக்ரைனும் அமெரிக்காவும் அடுத்த வாரம் சவுதி அரேபியாவில் சந்தித்து ரஷ்யாவின் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து பேச உள்ளனர். சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானுடன் திங்களன்று ஒரு சந்திப்புக்காக சவுதி அரேபியாவுக்குச் செல்லவிருப்பதாகவும், பின்னர் அமெரிக்க அதிகாரிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் ஜெலென்ஸ்கி வியாழக்கிழமை தெரிவித்தார்.

அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்ட்கோஃப் சவுதி அரேபியாவில் உக்ரைன் அதிகாரிகளைச் சந்திப்பார் என்றும், அங்கு அவர் "ஆரம்ப போர் நிறுத்தம்" மற்றும் நீண்ட கால ஒப்பந்தத்திற்கான "கட்டமைப்பு" குறித்து விவாதிப்பார் என்றும் அல் ஜசீரா தெரிவித்துள்ளது. 

சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் உறுதி

இந்த பேச்சுவார்த்தை ஜெட்டாவில் நடைபெறும் என்று சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, மார்ச் 1 அன்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் நடந்த கடுமையான வாக்குவாதத்திற்குப் பிறகு, டிரம்ப் உக்ரைனுக்கான இராணுவ உதவி மற்றும் உளவுத் தகவல்களைப் பகிர்வதை நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.