ஹூஸ்டனில் உள்ள சீன துணை தூதரகத்தின் அனைத்து நிகழ்வுகளையும், நடவடிக்கைகளையும் உடனே நிறுத்துமாறு, அமெரிக்க அரசு திடீரென சீனாவுக்கு உத்தரவிட்டுள்ளதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மோர்கன்  ஓர்டகஸ் அமெரிக்க அறிவுசார் சொத்துக்கள் மற்றும் அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதற்காக, சீன தூதரகத்தை மூட பணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவசர அவசரமாக மூடுவதற்கான காரணத்தை அவர் தெளிவுபடுத்தவில்லை. சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளில் கடந்த சில  ஆண்டுகளாக விரிசல் ஏற்பட்டுள்ளது.  இரு நாட்டுக்கும் இடையிலான வர்த்தகத்தில் நீடித்து வரும் பனிப்போர், கொரோனா வைரஸ் தொற்று, ஹாங்காங் விவகாரம், உய்குர் முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல், தென்சீனக்கடல் விவகாரம், உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடுமையான கருத்து மோதல் நிலவி வருகிறது. 

இந்நிலையில், சீனாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சீனா பல ஆண்டுகளாக சட்ட விரோத உறவு மற்றும் தகவல் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் அதன் நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன என கூறியுள்ளார். ஹூஸ்டனில் உள்ள சீனத் தூதரகத்தின் முன்பு சில முக்கியமான ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டதாகவும், அதை போலீசார் மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை மூட அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சீனாவின் அதிகாரப்பூர்வ வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சீன தூதரகத்தை மூடுவதற்கான உத்தரவு ஒருதலைபட்சமாக அமெரிக்காவால் எடுக்கப்பட்ட அரசியல் ஆத்திரமூட்டல் ஆகும். 

இது சர்வதேச சட்டத்தை கடுமையாக மீறுகிற செயல், சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும்  அடிப்படை விதிமுறைகள் மற்றும் இரு நாட்டுக்கும் இடையிலான தூதரக உறவுகளை கேள்விக்குறியாக்கும் செயல். அமெரிக்காவின் இந்நடவடிக்கையை சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வன்மையாக கண்டிக்கிறது. அமெரிக்கா இந்த முடிவை உடனே திரும்பப் பெற வேண்டும், அமெரிக்கா சீனாவின் சமூக அமைப்பிற்கு எதிராக தொடர்ந்து தேவையற்ற கலங்கம் மற்றும் தேவையற்ற தாக்குதல்களை தொடுத்து வருகிறது. அமெரிக்கா சீன ராஜதந்திர மற்றும் தூதரக ஊழியர்களை துன்புறுத்துகிறது. சீன மாணவர்களை மிரட்டுகிறது மற்றும் விசாரிக்கிறது, அவர்களின் தனிப்பட்ட மின் சாதனங்களை பறிமுதல் செய்கிறது, காரணமில்லாமல் அவர்களைத் தடுத்து வைக்கிறது, ஊடுருவல் மற்றும் குறுக்கீடு ஒருபோதும் சீனாவின் வெளியுறவுக் கொள்கையிலும், பணிகளிலும் பாரம்பரியத்திலும் இல்லை என சீனா காட்டமாக தெரிவித்துள்ளது.