'இனி என்கிட்ட அது நடக்காது'; முதன் முறையாக இந்தியாவை நேரடியாக விமர்சித்த டொனால்ட் டிரம்ப்!
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவை முதன்முறையாக நேரடியாக விமர்சித்துள்ளார். அவர் என்ன சொன்னார்? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
டொனால்ட் டிரம்ப் அதிரடி
அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டுள்ளார். அனைவரும் எதிர்பார்த்தபடியே பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை டிரம்ப் எடுத்து வருகிறார். அதாவது வெளிநாட்டவர்கள் அமெரிககா குடியுரிமை பெற கட்டுப்பாடுகள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தடை, அகதிகள் நுழைய தடை என அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்.
மேலும் 'அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே' என்ற முழக்கத்தை முன்னெடுத்து வரும் டிரம்ப், பிப்ரவரி 1ம் தேதி முதல் கனடா மற்றும் மெக்ஸிகோ இறக்குமதி பொருட்கள் மீது 25% வரி விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார். இதேபோல் சீனா பொருட்களுக்கு அதிக வரி விதிப்போம் என்று கூறியுள்ள டிரம்ப், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அந்த நாட்டை தாக்கி பேசி வருகிறார்.
இந்தியாவை விமர்சித்த டிரம்ப்
இந்நிலையில், டொனால்ட் டிரம்ப் இந்தியாவை முதன்முறையாக நேரடியாக விமர்சித்துள்ளார். அதாவது இந்தியா, சீனா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளை ''மிகப்பெரிய வரி விதிப்பாளர்கள்" என்று கண்டித்த டிரம்ப், இந்த மூன்று நாடுகளும் இந்த பாதையில் தொடர அமெரிக்கா இனிமேல் அனுமதிக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
இது தொடர்பாக புளோரிடாவில் குடியரசுக் கட்சியினர் மத்தியில் பேசிய அதிபர் டிரம்ப், ''சீனா ஒரு மிகப்பெரிய வரி விதிப்பாளர். இதேபோல் இந்தியா, பிரேசில் மற்றும் பல நாடுகள் உள்ளன. இனிமேல் இந்த நாடுகளை அப்படி நாம் அனுமதிக்க மாட்டோம். ஏனென்றால் நாம் அமெரிக்காவை முதன்மைப்படுத்தப் போகிறோம்'' என்றார்.
அதிக வரிகள் விதிப்போம்...
தொடர்ந்து பேசிய டிரம்ப், ''பிரிக்ஸ் கூட்டமைப்பின் உள்ள மூன்று நாடுகளும் (இந்தியா, சீனா, ரஷ்யா) தங்கள் நலன்களுக்காக செயல்படுகின்றன. தங்கள் நாட்டை நல்லதாக்க விரும்புகின்றன. ஆனால் நமக்கு தீங்கு விளைவிக்கின்றன. ஆகவே நமக்கு உண்மையில் தீங்கு விளைவிக்கும் நாடுகள் மீது அதிக வரிகளை விதிக்கப் போகிறோம்'' என்று தெரிவித்தார்.
சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளை நேரடியாக விமர்சித்து வரும் டிரம்ப், முதன்முறையாக இந்தியாவையும் தீங்கு விளைக்கின்றன என நேரடியாக விமர்சித்துள்ளார். அமெரிக்காவில் எந்த அதிபர் பதவிக்கு வந்தாலும் இந்தியாவுடன் நல்ல நட்புறவை பேணி வருகின்றனர். அதுவும் டொனால்ட் டிரம்பும், நமது பிரதமர் மோடியும் நெருங்கிய நண்பர்கள். பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாத தொடக்கத்தில் வாஷிங்டனில் டிரம்பை சந்திக்க வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியாகி இருந்தது.
இந்தியா-அமெரிக்கா உறவில் சிக்கல்
இந்த தகவல் வெளியான சிறிது நேரத்தில், இந்தியாவை 'அதிக வரி விதிக்கும் நாடு', 'தீங்கு விளைவிக்கும் நாடு' என டிரம்ப் பேசியிருப்பது இந்திய-அமெரிக்க உறவில் சிறிது சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாக பொருளாதர நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியாவும், அமெரிக்காவும் மிக்கபெரிய வர்த்தக கூட்டாளியாக இருக்கும் நிலையில், டிரம்ப்பின் இந்த பேச்சு இரு நாட்டு வர்த்தக உறவுகளை எந்த அளவு பாதிக்கும் என்பது போகப் போகத்தான் தெரியும்.