கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை இத்தாலியை  பின்னுக்கு தள்ளி வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. .

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் அழையா விருந்தாளியாக 200க்கும் மேற்பட்ட நாடுகளில் அடியெடுத்து வைத்து பெரும் உயிர் பலியை ஏற்படுத்தி வருகிறது. ஏழை, பணக்கார நாடுகள் என்ற பாரபட்சம் இல்லாமல் மனித குலத்திற்கு எதிராக வந்து நிற்கிறது. கண்ணுக்கே தெரியாத அந்த நுண்ணுயிரியிடமிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். கொரோனா உருவான சீனாவை விட அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் பல மடங்கு உயிரிழப்பு அதிகரித்துள்ளது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர உலக நாடுகள் பலவும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. ஆனாலும், கொரோனாவின் ருத்ரதாண்டவம் அதிகரித்து வருகிறது. இதனிடையே, கொரோனா தொற்று முழுமையாக நீங்கும்வரை உலக நாடுகள் ஊரடங்கு உத்தரவைத் தளர்த்தக் கூடாது என்று உலக சுகாதார அமைப்புக் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுவரை கொரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் 1,762,703 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,07,715 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் தொடர்ந்து அமெரிக்கா முதலிடத்தில் இருந்தது. அமெரிக்காவில் மட்டும் 5,07,534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் 1,61,852 பேரும், இத்தாலியில் 1,52,271 பேரும், பிரான்ஸில் 1,24,869 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதேபோல், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் இத்தாலியை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் மட்டும் மொத்தம் 20,126 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இத்தாலியில் 19,468, ஸ்பெயின் 16,480, பிரான்ஸ் 13,832 உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனால், அமெரிக்க மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.