ஜோ பைடன் மனைவிக்கு கொரோனா தொற்று: ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதில் சிக்கல்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவியும், அந்நாட்டின் முதல் பெண்மணியுமான ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது
ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வரவுள்ள நிலையில், அவரது மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த தகவலை வெள்ளை மாளிகை உறுதி படுத்தியுள்ளது. ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, அதிபர் ஜோ பைடனுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால், அவருக்கு கொரோனா தொற்று இல்லை எனவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
மேலும், அதிபர் ஜோ பைடனுக்கு சீரான இடைவெளியில் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு, அவரது உடல்நிலை கண்காணிக்கப்படும் எனவும் வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், ஜி20 உச்சி மாநாட்டில் அதிபர் ஜோ பைடன் கலந்து கொள்வாரா இல்லையா என்பது குறித்து வெள்ளை மாளிகை இன்னும் தெரிவிக்கவில்லை. அதேசமயம், ஜோ பைடனின் அதிகாரப்பூர்வ பயண அட்டவணையில் அவர் இந்தியா பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயண அட்டவணை ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று உறுதியானதாக வெளியான அறிவிப்புக்கு பின்னர் வெளியிடப்பட்டது. எனவே, ஜி20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆறு மாநில இடைத்தேர்தல்: விறுவிறு வாக்குப்பதிவு - எதிர்க்கட்சிகள் சோபிக்குமா?
ஜில் பைடனுக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டது. அதிபர் ஜோ பைடனுக்கு கடந்த மாதம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு தொற்று இல்லை என்றே தெரியவந்தது.
அமெரிக்காவில் சமீபத்திய வாரங்களில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனிடையே, பிஏ.2.86 மாறுபாடு தொடர்பான அச்சமும் எழுந்துள்ளது.