Chinese balloon: சீன பலூனை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா: பதிலடி கொடுப்போம் என சீனா உறுதி
உளவு பார்ப்பதாக சந்தேகிக்கப்பட்ட சீனாவின் ராட்சத பலூனை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.
அமெரிக்க வான் எல்லையில் பறந்துகொண்டிருந்த சீனாவைச் சேர்ந்த ராட்சத பலூனை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியிருக்கிறது. இதற்காக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் ராணுவத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
அந்நாட்டின் மொன்டானா மாகாணத்தில் அணு ஆயுத தளத்துக்கு மேல் முழு ராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில், சந்தேகத்துக்கு உரிய வகையில் ஒரு ராட்சத பலூன் பறந்தது. இது சீனாவை சேர்ந்த உளவு பலூன் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியது.
உடனடியாக அந்த பலூனை சுட்டு வீழ்த்த அதிபர் ஜோ பைடன் ராணுவத்துக்கு ஒப்புதல் அளித்தார். ஆனால், அந்த பலூன் அணுசக்தி ஏவுதளத்திற்கு மேல் பறந்துகொண்டிருந்தது என்பதால், அப்போது அதைச் சுட்டு வீழ்த்தினால் ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று ராணுவம் கருதியது. எனவே பலூனை வீழ்த்தும் நடவடிக்கை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், அந்த பலூன் நகர்வுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன.
Jupiter Moons: வியாழன் கிரகத்துக்கு 92 நிலவுகள்! 12 புதிய துணைக்கோள்கள் கண்டுபிடிப்பு!
இந்நிலையில் சனிக்கிழமை அமெரிக்காவின் தெற்குகிழக்கே உள்ள தெற்கு கரோலினா அட்லாண்டிக் பெருங்கடல் கரையில் சீனாவின் உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
முன்னதாக, அந்த பலூன் வானிலை கண்காணிப்புக்காக அனுப்பப்பட்டது என்றும் வழி தவறி அமெரிக்க வான் எல்லைக்குச் சென்றுவிட்டது என்றும் சீனா வருத்தம் தெரிவித்தது. இதுகுறித்த விவரங்களை விளக்குவதாகவும் கூறி இருந்தது.
ஆனால், அமெரிக்கா சனிக்கிழமை பலூனை சுட்டு வீழ்த்தியதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் செயல் அத்துமீறல் என்றும் தக்க பதிலடி கொடுப்போம் என்று சீனா கூறியுள்ளது.