Asianet News TamilAsianet News Tamil

Russia Ukraine War: பதிலடி கொடுத்த அமெரிக்கா..! ரஷ்யாவின் முக்கிய இடத்தில் கை வைத்த பைடன்..ஆடிப்போன புதின்..

Russia Ukraine War: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷ்யா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்நிலையில் தற்போது ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு இறுக்குமதிக்கு தடை விதிக்கும் அறிவிப்பை அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
 

US bans crude oil imports from Russia
Author
America, First Published Mar 9, 2022, 9:30 AM IST

ரஷ்ய எரிவாயு, எண்ணெய் மற்றும் எரிசக்தி ஆகிய அனைத்திற்கும் இறக்குமதி தடையை அமெரிக்கா விதித்துள்ளது. இது வரலாற்றின் மிக முக்கியமான பொருளாதார தடைகளை அமல்படுத்துகிறோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதன் பொருளாதாரத்தின் முக்கிய அம்சத்தை குறி வைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24 ஆம் தேதி போர் தொடுத்தது. இதற்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் கண்டனங்களை தெரிவித்தது. இந்நிலையில் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இந்நிலையில் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிக்கு அமெரிக்கா தடைவிதித்துள்ளது.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,  ரஷ்யாவின் அனைத்து எண்ணெய், எரிவாயு , எரிசக்தி இறக்குமதிக்கு தடைவிதிக்கிறோம். இதன்மூலம் அமெரிக்கா துறைமுகங்களில் இனி ரஷ்யாவின் பெட்ரோலிய பொருட்கள் கிடைக்காது என்று அவர் கூறினார். அமெரிக்க அதிபர் பைடனின் இந்த முடிவினை அமெரிக்க வர்த்தக சபை வரவேற்றுள்ளது. மேலும் உள்நாட்டிலே கூடுதலாக எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி செய்வதற்கு உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டிய தருணம் இது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

மேலும் கடந்த ஆண்டு வரை ரஷ்யாவிலிருந்து 7 லட்ச பீப்பாய்  கச்சா எண்ணெய் வீதம் அமெரிக்கா இறக்குமதி செய்து வந்தது. அதே வேளையில் அமெரிக்காவில் நாளொன்று 2 கோடி  பீப்பாய் கச்சா எண்ணெய் பயன்படுத்தி வந்தது என்றார். உக்ரைன் மக்களுக்கு அமெரிக்கர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார்கள். இந்த இறக்குமதி தடை மூலம் அமெரிக்காவிலும் பாதிப்பு ஏற்படும்.ஆனால், சுதந்திரத்தை காப்பாற்றுவதற்கு நாம் விலைக்கொடுத்து தான் ஆக வேண்டும் என்று தெரிவித்தார்.

அமெரிக்கா அறிவித்ததை தொடர்ந்து ஐரோப்பிய யூனியனும் ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யும் இயற்கை எரிவாயு அளவை மூன்றில் ஒரு பங்கு குறைக்க போவதாக முடிவு செய்துள்ளது. எரிசக்தி தேவையில் அமெரிக்காவை விட ஐரோப்பிய யூனியனே ரஷ்யாவை அதிகளவு நம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தடையின் மூலம் ரஷ்யாவின் பொருளாதாரம் பெரியளவில் பாதிக்கப்படும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்வதுடன் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகின்றன.

இருப்பினும் ரஷ்யா, தங்கள் நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடைவிதிப்பதற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 300 டாலரை எட்டக்கூடும் என்று ரஷ்யா தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள் எரிவாயு இறக்குமதிக்கு தடைவிதித்தால், நாங்கள் ஐரோப்பாவிற்கு விநியோகிக்கும் எரிவாயு முழுவதுமாக நிறுத்திவோம் என்று ரஷ்ய துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவக் எச்சரித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios