உலகம் முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் உலகளவில் சுமார் 60 கோடி மக்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படும் சூழல் உருவாகி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது ,  உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்துவரும் நிலையில் ஐநா சபை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் சுமார் 150க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது ,இந்த வைரஸ் தாக்காத நாடுகளே இல்லை என்று  சொல்லும் அளவிற்கு அதன் கோடூரக் கரம் பரந்து விரிந்துள்ளது.  இதுவரை 15 லட்சத்துக்கும் அதிகமானோர் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது ,  இத்தாலி ,   ஸ்பெயின் ,  பிரான்ஸ் ,   ஆஸ்திரேலியா ,  இங்கிலாந்து ,  அமெரிக்கா ,  ஈரான் ,  தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

 உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் .  அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ளது  இந்த வைரஸில் இருந்து எப்படி தப்பிப்பது என வழி தெரியாமல் உலகநாடுகள் விழிபிதுங்கி நிற்கின்றன. இதுவரை  இந்த வைரஸை குணப்படுத்த பிரத்தியேக தடுப்பூசிகள் ஏதும் இல்லாததால்,  இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் கண்டுபிடித்துள்ள ஒரே வழி சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது மட்டுமே, ஆம் சமூக இடைவெளியை கடைபிடிப்பதின் மூலம் இந்த வைரசை 80 சதவீதம் வரை கட்டுப்படுத்திவிட முடியும் என்பது மருத்தும ஆராய்ச்சியாளர்களின் கூற்று,  எனவே,  சமூக இடைவெளிகளை கடைபிடிக்க வேண்டும் என்றால் ஊரடங்கு உத்தரவு அவசியம் என்பதை உணர்ந்து கொண்ட உலக நாடுகள், கொரோனாவுக்கு எதிரான ஆயுதமாக ஊரடங்கை கையிலெடுத்துள்ளன .  கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது,  இதனால் ஓரளவிற்கு வைரஸ் பரவலை  கட்டுப்படுத்த முடிந்தது என்றாலும்கூட கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அவலம் உருவாகி உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது, 

சுவர் இருந்தால் சித்திரம் எழுதலாம் என்ற தத்துவத்தின் படி, ஊரடங்கை மக்கள் பின்பற்றி வருகின்றனர், அனைத்து வகையான தொழிலும் முடங்கியுள்ளதால்  உலக அளவில் கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் வாடும் அபாய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.  ஆம்... உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் ஏழைத் தொழிலாளர்கள் ,  தொழிற்சாலைப் ஊழியர்கள், அமைப்புச்சாரா தொழிலாளர்கள்,  கூலித்தொழிலாளர்கள் என கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர் .  இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபை புள்ளிவிவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது கொரோனா பாதிப்பின் எதிரொலியாக உலகில் பல்வேறு நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளன, இதனால்  உலக அளவில் சுமார் 60 கோடி மக்கள் ஏழைகளாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது  என எச்சரித்துள்ளது .  இதன் மூலம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு சுமார் 50 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளப்படுவார்கள் எனவும் அது தெரிவித்துள்ளது .  இந்த மோசமான சூழ்நிலையை  உலக நாடுகள் ஒன்றிணைந்து எதிர் கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை 2030ஆம் ஆண்டுக்குள் வறுமையை ஒழிக்க இலக்கு நிர்ணயித்துள்ளடன், இது தவறினால் வறுமையால் பலர் உயிரிழக்க நேரிடும் அபாயம் உள்ளது எனவும் எச்சரித்துள்ளது.