ரஷ்யாவின் டுபோலேவ் நிறுவனத்தின் 4.4 ஜிகாபைட் ரகசியத் தரவுகளை உக்ரைன் ராணுவ உளவுத்துறை கைப்பற்றியுள்ளது. இதில் பணியாளர் கோப்புகள், வீட்டு முகவரிகள் மற்றும் கொள்முதல் பதிவுகள் உள்ள
ரஷ்யாவின் மூலோபாய போர் விமானங்களைத் தயாரிக்கும் முக்கிய நிறுவனமான டுபோலேவின் (Tupolev) ரகசிய தரவுகளை உக்ரைன் ராணுவ உளவுத்துறை (HUR) கைப்பற்றியுள்ளதாக கீவ் இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் சோவியத் காலத்தைச் சேர்ந்த விமான உற்பத்தி நிறுவனமான டுபோலேவ், தற்போது ரஷ்யாவின் பாதுகாப்பு-தொழில்துறை அமைப்பில் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் அதன் பங்கிற்காக, 2022 முதல் இந்த நிறுவனம் சர்வதேச தடைகளுக்கு உட்பட்டுள்ளது. டுபோலேவ் தயாரித்த போர் விமானங்கள், உக்ரைனிய நகரங்கள் மீது நீண்ட தூர ஏவுகணைகளை ஏவுவதற்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
4.4 GB ரகசியத் தரவுகள்:
உக்ரைன் ராணுவ உளவுத்துறையின் சைபர் பிரிவு 4.4 ஜிகாபைட்டுகளுக்கும் அதிகமான ரகசியத் தரவுகளைப் பெற்றுள்ளது எனக் கூறப்படுகிறது. இதில் அதிகாரப்பூர்வ கடிதங்கள், பணியாளர் கோப்புகள், வீட்டு முகவரிகள், சுயவிவரங்கள், கொள்முதல் பதிவுகள் ஆகியவை அடங்கும்.
"பெறப்பட்ட தரவுகளின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட முடியாது" என்றும் கீவ் இன்டிபென்டன்ட் அறிக்கை கூறுகிறது. "இப்போது, உக்ரைனிய உளவுத்துறைக்குத் தெரியாத டுபோலேவின் ரகசிய நடவடிக்கைகள் எதுவும் இல்லை." எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ரஷ்யாவின் அணுசக்தி படை:
கிடைத்துள்ள தகவல்களில், ரஷ்யாவின் குண்டுவீச்சு போர் விமானங்களான Tu-95 மற்றும் Tu-160 போன்றவற்றை பராமரிக்கும் பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றிய விரிவான தகவல்கள் உள்ளன. இந்த விமானங்கள் ரஷ்யாவின் அணுசக்தி படையின் ஒரு முக்கிய பகுதியாகும்.
"குறிப்பாக, ரஷ்யாவின் போர் விமானப் போக்குவரத்தை நேரடியாகப் பராமரிக்கும் தனிநபர்கள் பற்றிய விரிவான தகவல்களை நாங்கள் பெற்றுள்ளோம்," என்று உக்ரைன் உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாக கீவ் இன்டிபென்டன்ட் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் சைபர் தாக்குதல்:
உக்ரைனைச் சேர்ந்த சைபர் ஆபரேட்டர்கள் டுபோலேவ் இணையதளத்தையும் ஹேக் செய்து, அதன் முகப்புப் பக்கத்தில் ரஷ்ய விமானம் ஒரு ஆந்தையில் பிடியில் சிக்கியிருப்பது போன்ற படத்தை வைத்துள்ளனர்.
உக்ரைன் நடந்திய "ஸ்பைடர்வெப்" (SpiderWeb) டிரோன் தாக்குதலில் ரஷ்யாவின் போர் விமானப் படையில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் முடங்கியது. அதற்கு அடுத்த சில நாட்களில் இந்த சைபர் தாக்குதல் நடந்துள்ளது. உக்ரைனின் இந்த மிகப்பெரிய டிரோன் தாக்குதலில், ரஷ்யாவின் Tu-95 மற்றும் Tu-22M3 விமானங்கள் உட்பட 41 போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
