அமெரிக்க அதிபர் டிரம்புடன் வாக்குவாதம் நடந்த மறுநாள், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, அமெரிக்காவுடன் கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயார் என்றும், இது பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கான முதல் படி என்றும் அறிவித்துள்ளார். அமெரிக்க ஆதரவுக்கு நன்றி தெரிவித்த அவர், போர் நிறுத்தத்திற்குப் பிறகும் பாதுகாப்பு தேவை என்றார். உக்ரைனின் குரல் உலகளவில் கேட்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் நடந்த சூடான வாக்குவாதத்திற்கு ஒரு நாள் கழித்து, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுள்ளார். தனது நாடு உண்மையான அமைதியையே நாடுகிறது என்பதை வலியுறுத்தியுள்ள அவர், அமெரிக்காவுடன் கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
"கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட நாங்கள் தயாராக இருக்கிறோம், அது பாதுகாப்பு உத்தரவாதங்களை நோக்கிய முதல் படியாக இருக்கும். ஆனால் அது போதாது, அதற்கு மேலும் பாதுகாப்புக்கு உத்தரவாதங்கள் தேவை. அது இல்லாதபோது போர்நிறுத்தம் உக்ரைனுக்கு ஆபத்தானதாகவே இருக்கும். நாங்கள் 3 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். அமெரிக்கா தங்கள் பக்கம் இருப்பதையும் உக்ரேனிய மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்" என்று அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஆதரவிற்கு நன்றி தெரிவித்த ஜெலென்ஸ்கி, "அமெரிக்கா அளித்த அனைத்து ஆதரவிற்கும் நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அதிபர் டிரம்ப் மற்றும் அமெரிக்க்க காங்கிரஸ் அளிக்கும் ஆதரவுக்கும் அமெரிக்க மக்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன். உக்ரேனியர்கள் எப்போதும் இந்த ஆதரவைப் பாராட்டியுள்ளனர். குறிப்பாக இந்த மூன்று ஆண்டுகால படையெடுப்பின் போது." எனவும் கூறியுள்ளார்.
அமைதிக்கான உக்ரைனின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அவர், "நாங்கள் உயிர்வாழ உதவுவதில் அமெரிக்காவின் உதவி மிக முக்கியமானது, அதை நான் ஒப்புக்கொள்கிறேன். உரையாடல் கடினமானதாக இருந்தபோதிலும், மூலோபாய கூட்டுறவில் இருக்கிறோம். ஆனால் உண்மையிலேயே நமது இலக்குகளைப் புரிந்துகொள்ள நாம் ஒருவருக்கொருவர் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் குரல் உலகளவில் கேட்கப்படுவதன் முக்கியத்துவத்தையும் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். "உக்ரைனில் உள்ள மக்கள் தாங்கள் தனியாக இல்லை என்பதை அறிந்துகொள்வது முக்கியம். அவர்களின் நலன்கள் ஒவ்வொரு நாட்டிலும், உலகின் ஒவ்வொரு மூலையிலும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன" என்றார்.
வெள்ளிக்கிழமை டிரம்ப் மற்றும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸுடனான ஜெலென்ஸ்கியின் சர்ச்சைக்குரிய சந்திப்பைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் புதிய உச்சத்தை எட்டின.
உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான சமாதான ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக நடத்தப்பட்ட இந்தச் சந்திப்பு, வாய்மொழி மோதலில் முடிந்தது. டிரம்ப் ஜெலென்ஸ்கியை போர்நிறுத்தத்தை ஏற்குமாறு வலியுறுத்தினார், பேச்சுவார்த்தைகளை முடக்குவதாகவும் ஜெலென்ஸ்கி மீது குற்றம் சாட்டினார். ரஷ்யா மீதான உக்ரைனின் நிலைப்பாட்டை ஒரே இரவில் மாற்ற முடியாது என்றும், டிரம்புடனான மோதல் இருநாடுகளுக்கும் தீங்கு விளைவிக்கும் என்றும் கூறி ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தையில் இருந்து பின்வாங்கினார்.
டிரம்ப் - ஜெலென்ஸ்கியின் இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் உக்ரைனின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
