அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த சமாதான ஒப்பந்தத்திற்கு உக்ரைன் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளதாக சிபிஎஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, உக்ரைன் சில பகுதிகளை ரஷ்யாவிடம் விட்டுக்கொடுப்பது போன்ற நிபந்தனைகள் உள்ளன.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முக்கிய திருப்பமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த சமாதான ஒப்பந்தத்திற்கு உக்ரைன் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளதாக சிபிஎஸ் செய்தி நிறுவனம் (CBS News) செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அதிகாரி ஒருவர் இத்தகவலைக் கூறியதாகவும் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் சில சிறிய விவரங்கள் மட்டுமே இறுதி செய்யப்பட வேண்டியுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஜெலென்ஸ்கி ஒப்புதல்

பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர், "உக்ரைனியர்கள் அமைதி ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளனர். இன்னும் சில சிறிய விவரங்கள் மட்டுமே தீர்க்கப்பட உள்ளன, ஆனால் அவர்கள் அமைதி ஒப்பந்தத்திற்கு சம்மதித்துள்ளனர்," என்று தெரிவித்துள்ளார்.

அமைதித் திட்டத்திற்கு கீவ் ஒப்புக்கொண்டதாக அறிக்கை வெளியான நிலையில், உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஜெலென்ஸ்கி உடனடியாக சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.

எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், "அமெரிக்கத் தரப்புடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுகிறது. அமெரிக்காவின் அனைத்து முயற்சிகளுக்கும், குறிப்பாக அதிபர் ட்ரம்பின் முயற்சிகளுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்," என்று ஜெலென்ஸ்கி குறிப்பிட்டிருந்தார்.

ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்

தற்போது, ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) போர் நிறுத்தத் திட்டம் குறித்து விவாதிக்க அமெரிக்கப் பிரதிநிதிகள் குழு ரஷ்ய அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தி வருகிறது. அமெரிக்க ராணுவச் செயலாளர் டான் ட்ரிஸ்கால் தலைமையிலான இக்குழுவின் பேச்சுவார்த்தை "நன்றாக" நடந்ததாக அமெரிக்க ராணுவ லெப்டினன்ட் கர்னல் ஜெஃப் டால்பர்ட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் முன்வைத்த 28 அம்சங்களைக் கொண்ட அமைதித் திட்டமே இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையாகும். இந்த முன்மொழிவில் மூன்று முக்கிய நிபந்தனைகள் உள்ளன.

அவை, 1) உக்ரைன் சில கூடுதல் பகுதிகளை ரஷ்யாவிடம் விட்டுக்கொடுக்க வேண்டும், 2) உக்ரைன் தனது ராணுவத்தின் அளவு மற்றும் செயல்பாடுகளில் கட்டுப்பாடுகளை ஏற்க வேண்டும், 3) நேட்டோ (NATO) அமைப்பில் சேரும் தனது இலக்கைக் கைவிட வேண்டும்.

முன்னதாக, இந்தப் பேச்சுவார்த்தை நிபந்தனைகளை "சரணடைவதற்குச் சமம்" என்று உக்ரைன் எதிர்த்தது குறிப்பிடத்தக்கது.

கச்சா எண்ணெய் விலைகள் சரிவு

போர் நிறுத்தம் தொடர்பான செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளன.

பிரெண்ட் கச்சா எண்ணெய் ஃபியூச்சர்கள் 2.5% சரிந்து அவுன்ஸ் ஒன்றுக்கு $61.15 ஆகவும், அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இடைநிலை ஃபியூச்சர்கள் 2.86% சரிந்து அவுன்ஸ் ஒன்றுக்கு $57.17 ஆகவும் வீழ்ச்சியடைந்தன.

ஐரோப்பிய நட்பு நாடுகள் மத்தியில் ட்ரம்ப், மாஸ்கோவுக்குச் சாதகமான ஒரு ஒப்பந்தத்தை உக்ரைனை ஏற்கும்படி கட்டாயப்படுத்துவதாகக் கவலைகள் எழுப்பப்பட்ட நிலையில், இந்த அமைதி ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ள ட்ரம்ப் ஒரு காலக்கெடுவை நிர்ணயித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.