Rishi Sunak: பிரதமரே இப்படி பண்ணலாமா? நாயை திரியவிட்ட ரிஷி சுனக்கை கண்டித்த போலீஸ்
பிரதமர் ரிஷி சுனக் பூங்காவுக்குச் சென்றபோது விதிகளை மீறி தனது நாயை சுதந்திரமாகச் சுற்றித் திரிய விட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.
அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்கிவரும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தனது நாய் மூலம் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தன் குடும்பத்தினருடன் தலைநகர் லண்டனில் உள்ள ஹைட் பூங்காவுக்குச் சென்றிருக்கிறார். அங்கு அவர் நடந்து செல்லும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது. அந்த வீடியோவில் ரிஷி சுனக் வளர்க்கும் நோவா என்ற லாப்ரடோர் நாய் பூங்காவில் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் காட்சியும் இடம்பெற்றது.
பூங்காவில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக நாய்களை முறையாக வழிநடத்திச் செல்லவேண்டும் என்று விதிமுறை உள்ளது. அதுபற்றிய அறிவிப்பும் பூங்காவில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விதியை மீறி பிரதமர் ரிஷி சுனக்கின் செல்லப்பிராணி பூங்காவில் சுற்றித் திரிந்ததற்கு லண்டன் காவல்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
சம்பவ நடைபெற்றபோது அந்தப் பகுதியில் இருந்த அதிகாரி ஒருவர், ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தியிடம் விதிமுறைகளைப் பற்றி நினைவூட்டியதாக காவல்துறையினர் கூறுகின்றனர். இந்தச் சம்பவம் பற்றி ரிஷி சுனக்கின் செய்தித் தொடர்பாளரிடம் விசாரித்தபோது அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் போரிஸ் ஜான்சன் பிரதமராக இருந்தபோது, ரிஷி சுனக் நிதியமைச்சராக இருந்தார். அப்போது கொரோனா தொற்றைத் தடுக்க சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று விதிமுறை இருந்தது. ஆனால், அதனை மீறி டவுனிங் ஸ்ட்ரீட் விருந்தில் ரிஷி சுனக் கலந்துகொண்டார். அதற்காக அபாரதமும் செலுத்த நேரிட்டது.
அண்மையில் பிரதமர் ரிஷி சுனக் காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணிக்கும் வீடியோ வெளியானது. பிரதமரே போக்குவரத்து பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாமல் இருக்கலாமா என்ற சர்ச்சை ஏற்பட்டது. இந்த விவகாரத்திலும் காவல்துறை அவருக்கு அபராதம் விதித்தது.