அதிபர் ட்ரம்பின் பதிவுகள், டுவிட்டரின் நெறிமுறைகளை மீறுகிறது எனவும்,  வன்முறையை புனிதப் படுத்துவது போல இருப்பதாகவும் அவர் மீது ட்விட்டர் நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது. உலக வல்லரசான அமெரிக்க ஜனாதிபதி பதவி என்பது, உலகில் அதிவல்லமை படைத்த பதவியாக கருதப்படுகிறது. இதுவரை அப்பதவியில் இருந்த அதிபர்கள், அமெரிக்காவின் மாண்பையும், கௌரவத்தையும் காக்க கூடியவர்களாக இருந்து வந்துள்ளனர். ஆனால் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அது அத்தனைக்கும் எதிர்மறையாக இருந்து வருகிறார். சமீபத்தில் அவரின் பேட்டிகளும், சமூக வலைதளத்தில் அவரின் பதிவுகளும், அவர் ஒரு அடாவடி காரர் என்றும்,  அவர் ஒரு பொய்யர் என்றும், இனவாதி என்பது போன்றும் அவர்மீது விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.

 

எல்லை விவகாரத்தில் சீனா மீது பிரதமர் மோடி நல்ல மனநிலையில் இல்லை என்றும்,  அவரிடம் பேசியபோது அதைத் தெரிந்து கொண்டேன் என்றும் சில நாட்களுக்கு முன்பு அவர் கூறினார். ஆனால் கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பின் பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க ஜனாதிபதியும் பேசிக்கொள்ளவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அவசர அவசரமாக ட்ரம்பின் தகவலை மறுத்துள்ளது.  இதற்கு முன்பு பாகிஸ்தானுடனான காஷ்மீர் விவகாரத்தில் இதே போல் தன்னை தலையிட்டு பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார் என்றும்  ட்ரம்ப் கூற,  அப்போதும் தான் அப்படி வேண்டுகோள் எதையும் வைக்கவில்லை என்று மோடி தெரிவித்தார். இதற்கிடையேதான் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட இரண்டு பதிவுகளை பொய்யான தகவல்கள் என ட்விட்டர் நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது. 

அதைத் தொடர்ந்து, ட்ரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று  அடுத்தடுத்த இரண்டு டுவிட்களை பதிவிட்டுள்ளார்.  அதாவது,  அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை மையமாகக் கொண்ட அந்த டுவிட்டில்,  மெயில்-இன் வாக்குச்சீட்டுகள் மோசடிக்கு வழிவகுக்கும் என்றும்,  அஞ்சல் பெட்டிகள் கொள்ளையடிக்கப்படும், போலியான வாக்குச் சீட்டுகள் சட்டவிரோதமாக அச்சிடப்பட்டு மோசடியாக கையொப்பமிடப்படும், கலிபோர்னியா ஆளுநர் பில்லியன் கணக்கான மக்களுக்கு வாக்குச்சீட்டு அனுப்புகிறார் என்றும் கூறியிருந்தார். டிரம்பின் இந்த இரண்டு டுவிட்களும் பொய்யான தகவல்களை கொண்டது என்றும் டுவிட்டர் நிறுவனம் கூறியுள்ளது.  மெயில்-இன் பேலட் குறித்து ட்ரம்பின் அறிக்கை, மக்களை தவறாக வழிநடத்தும் என்று கூறி அந்த இரண்டு டுவிட்களையும் பொய் ட்வீட்கள் என்று டுவிட்டர் ட்ரம்பை தாக்கியுள்ளது.

அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிலாய்டு என்ற காவலாளி, நிறவெறியினால் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக அங்கு போராட்டம் வெடித்துள்ள நிலையில்,  இவ்வாறு போராட்டம் நடத்துவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டும் என்றும் அடுத்த ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். ட்ரம்பின் இந்த பதிவு,  ட்விட்டரின் நெறிமுறைகளை மீறி, வன்முறையை புனித படுத்துவது போல இருக்கிறது என ட்விட்டர் நிறுவனம் அவரை கடுமையாக சாடியுள்ளது.