இங்கிலாந்தில் இருக்கும் சவுத்தாம்ப்டன் பகுதியை சேர்ந்தவர்கள் கேட்டி டேவிஸ்(37), எம்மா டேவிஸ்(37). இரட்டை சகோதரிகளான இவர்கள் இருவரும் சிறு வயதிலிருந்தே இணைபிரியாமல் வளர்ந்து வந்துள்ளனர். பள்ளிப்படிப்பை முடித்த பிறகு கல்லூரியில் நர்சிங் பிரிவை ஒன்றாக தேர்ந்தெடுத்து படித்தனர். படிப்பு முடிந்த பிறகு இருவருக்கும் ஒரே மருத்துவமனையில் செவிலியர் பணி கிடைத்தது. ஒன்றாக வேலை பார்த்து வாழ்வை மகிழ்ச்சியாக கழித்து வந்த இருவருக்கும் இடியாக வந்து இறங்கியது கொடூர கொரோனா வைரஸ்.

தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இங்கிலாந்திலும் படுவேகத்தில் பரவி வருகிறது. அங்கு இதுவரையில் 152,840 பேருக்கு பரவி 20,732 உயிர்களை பறித்து இருக்கிறது. இந்த நிலையில் இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பிரிவிற்கு இரட்டை சகோதிரிகள் இருவரும் பணியமர்த்தப்பட்டனர். அதில் மிகுந்த ஈடுபாட்டோடு சேவையாற்றி வந்த இருவருக்கும் அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனை செய்ததில் இரட்டை சகோதரிகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அதே மருத்துவமனையில் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கேட்டி டெவிஸ் உயிரிழந்தார். அதைதொடர்ந்து நேற்று முன்தினம் எம்மா டேவிஸும் மரணமடைந்தார். இது ஒட்டுமொத்த இங்கிலாந்தையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. செவிலியர்களாக கொரோனாவால் பாதித்தவர்களுக்கு சேவையாற்றி வந்த இரட்டை சகோதரிகள் அதே தொற்றுநோய்க்கு பலியான சம்பவம் அந்நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இது தொடர்பாக அவர்களின் மற்றொரு சகோதரி ஜோயி டேவிஸ் கூறும்போது இருவரும் ஒன்றாகவே உலகிற்கு வந்தனர். தற்போது ஒன்றாகவே உலகைவிட்டு போய்விட்டனர். பிறப்பும் இறப்பும் அவர்களை பிரிக்கவில்லை என்று உருக்கத்தோடு கூறியிருக்கிறார்.