அமெரிக்கர்களை வளப்படுத்துகிற, அமெரிக்க கலாசாரத்தை வளப்படுத்துகிற மக்கள் அமெரிக்காவுக்கு வர வேண்டும் என்று டிரம்ப் விரும்புகிறார்.

புளோரிடாவில் மெல்போர்ன் நகரில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கலந்து கொண்டு பேசினார்.

பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், அதிபர் பதவி ஏற்ற இந்த ஒரு மாத காலத்தில் அவர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் அனைத்தும் சரியே என்று நியாயப்படுத்தி தன்னுடைய பாணியில் பேசினார்.

அப்போது அவர் பேசியது:

“என்னால் முடிந்ததையெல்லாம் செய்வேன். ஆனால் ஊடகத்தினர் தனியான செயல்திட்டத்துடன் செயல்படுகிறார்கள். அவர்களின் செயல்திட்டம், நமது செயல்திட்டம் அல்ல.

நமது நாட்டுக்குள் ஆயிரம் ஆயிரம் பேரை அனுமதித்துக் கொண்டிருக்கிறோம். அவர்களை ஆய்வு செய்வதற்கு ஒரு வழி இல்லை. அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை. அவர்களிடம் முறையாக எதுவும் இல்லை.

அமைதியை பார்ப்பதற்கு பதிலாக நாம் போர்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் போர்கள் ஒரு நாளும் ஓயப் போவதில்லை. மோதல்களும் முடிவுக்கு வரப்போவதில்லை.

நாம் வெற்றி பெறுவதற்காக போரிடுவதில்லை. போர்களை அரசியல் ரீதியில் சரி செய்வதற்கு போரிடுகிறோம். இப்படியே போனால் நாம் இனியும் வெற்றி பெற முடியாது; நாம் வர்த்தகத்தில் வெற்றி பெற இயலாது; நாம் எதிலும் வெற்றி பெற முடியாது; நாம் மீண்டும் வெற்றியை தொடங்க முடியாது; என்னை நம்புங்கள்.

ஐ.எஸ். இயக்க பயங்கரவாதிகளை அடியோடு ஒழித்துக்கட்ட வேண்டும். அதற்கான நடவடிக்கையில் இறங்கி இருக்கிறேன். இதற்கான திட்டத்தை வகுத்து தருமாறு ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ் தலைமையிலான ராணுவ துறையினரை கேட்டுள்ளேன்.

நமது ராணுவத்தை மிகப்பெரியதாக மறுகட்டமைப்பு செய்வதற்கான மேம்பாட்டு திட்டத்தையும் கேட்டிருக்கிறேன்.

சிரியாவிலும் பிற இடங்களிலும் பாதுகாப்பு பிரதேசங்களை கட்டமைக்க விரும்புகிறேன். இதனால் இடம்பெயர்வோர் அங்கேயே பாதுகாப்பாக வாழ ஒரு வழிபிறக்கும்.

நாம் வலிமையின் மூலமாக அமைதியை பின்தொடர்வோம். நமது ராணுவம், மோசமான வடிவத்தில் உள்ளது. நாம் உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் சிறந்த தளவாடங்களை கொண்டு வருவோம்.

நமது நாட்டுக்கு மக்கள் வரவேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் நம்மை நேசிக்கிற மக்கள் வரவேண்டும் என்று விரும்புகிறோம். நம்மை வளப்படுத்துகிற, நமது கலாசாரத்தை வளப்படுத்துகிற மக்கள் வர வேண்டும். நமது நாட்டை மாபெரும் நாடாக மாற்றுவதற்கு ஏற்ற மக்கள் வரவேண்டும் என்று விரும்புகிறோம். மோசமான எண்ணங்களுடன் கூடிய மக்களை நாம் விரும்பவில்லை.

நமது நாட்டினருக்கு மீண்டும் வேலைவாய்ப்புகளை பெற்றுத்தருகிற நடவடிக்கைகளை தொடங்கி உள்ளேன். நமது பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்டும் திட்டங்களையும் தொடங்கி இருக்கிறேன்.

வாழ்க்கையே ஒரு பிரச்சாரம் போலத்தான். நமது நாட்டை மாபெரும் நாடாக ஆக்குவதே இப்போதைய பிரச்சாரம்.

இவ்வாறு அவர் கூறினார்.