மனிதகுலத்திற்கே உதவிய மோடி..! நெகிழ்ந்துருகி இந்தியாவிற்கு நன்றி கூறிய ட்ரம்ப்..!
இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி. இதை மறக்க முடியாது. இந்த போராட்டத்தில் மிகவும் உறுதியான தலைமை பண்பு கொண்டு இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் மனிதநேயத்திற்கே உதவி செய்துவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி
உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் 15 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு பரவி இதுவரை 88415 உயிர்களை பறித்துள்ளது. உலகிலேயே அமெரிக்காவில் தான் தற்போது பாதிப்பு எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்து வருகிறது. அந்நாட்டில் இதுவரையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்திருக்கும் நிலையில் 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா நோயால் வல்லரசு அமெரிக்காவே நிலை குலைந்து போயுள்ளது.
கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்தாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அது இந்தியாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படுவதால் அண்மையில் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசிய ட்ரம்ப் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய கோரிக்கை விடுத்திருந்தார். அந்த நேரத்தில் வெளிநாடுகளுக்கு மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தியாவில் தடை நீடித்திருந்தது.
இதனால் கோபமடைந்த டிரம்ப் அமெரிக்கா ஆர்டர் செய்த மருந்துகளை இந்தியா அனுப்பவில்லையெனில் தக்க பதிலடி கொடுக்கப்படலாம் என எச்சரிக்கை விடும் வகையில் கூறினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆனால் அதன்பிறகு இந்தியாவில் ஹைட்ரோகுளோரோகுயின் உள்பட்ட 22 வகையான மருந்துப்பொருட்களை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு நீக்கியது. இதனால் அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகுவதில் இருந்த சிக்கல் நீக்கியுள்ளது. இந்தநிலையில் இந்தியாவிற்கும் பிரதமர் மோடிக்கும் ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், 'அசாதாரண நேரங்களில் நண்பர்களுக்கு இடையே மிகவும் நெருக்கமான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. ஹைட்ரோகுளோரோகுயின் மருந்துகள் விவகாரத்தில் முடிவெடுத்த இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி. இதை மறக்க முடியாது. இந்த போராட்டத்தில் மிகவும் உறுதியான தலைமை பண்பு கொண்டு இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் மனிதநேயத்திற்கே உதவி செய்துவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி’ என அவர் பதிவிட்டுள்ளார்.