நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் 286 நாட்கள் விண்வெளியில் சிக்கியிருந்தனர். அவர்களுக்கு ஒரு நாளைக்கு 5 டாலர் ஊதியம் வழங்கப்பட்டதை அறிந்த டிரம்ப், தனிப்பட்ட முறையில் கூடுதல் ஊதியம் வழங்குவதாக உறுதியளித்தார். எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் மீட்புப் பணியை டிரம்ப் பாராட்டினார். மேலும், பிடன் விண்வெளி வீரர்களை கையாண்ட விதத்தை டிரம்ப், மஸ்க் இருவரும் விமர்சித்தனர்.

286 நாட்கள் விண்வெளியில் சிக்கித் தவித்த நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோருக்கு கூடுதல் ஊதியத்தை தனிப்பட்ட முறையில் வழங்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை உறுதியளித்தார்.

விண்வெளி வீரர்களுக்கு ஒரு நாளைக்கு 5 டாலர் மட்டுமே கூடுதல் சம்பளமாக வழங்கப்பட்டதை அறிந்த பிறகு டிரம்ப் இந்த வாக்குறுதியை அளித்தார்.

ஃபாக்ஸ் நியூஸ் பேட்டியில் பேசிய டிரம்ப், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) விண்வெளி வீரர்கள் நீண்ட காலம் தங்குவதற்கு நாசா ஒதுக்கிய சிறிய தொகையைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகத் தோன்றியது. "யாரும் இதை என்னிடம் சொன்னதில்லை" என்று கூறிய டிரம்ப், "அவ்வளவுதானா? அவர்கள் கடந்து வந்த பாதையைப் பார்க்கும்போது இது பெரிய தொகை அல்ல" என்றார்.

"தேவைப்பட்டால், நானே என் சொந்தப் பணத்தில் இருந்து அவர்களுக்கு செலுத்துவேன்" என்றும் அவர் கூறினார்.

மீட்புப் பணியில் எலான் மஸ்க்:

சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் தலைமையிலான மீட்புப் பணியின் மூலம் பூமிக்குத் திரும்பியுள்ளனர். மார்ச் 18ஆம் தேதி புளோரிடாவின் டல்லாஹஸ்ஸிக்கு அருகிலுள்ள மெக்சிகோ வளைகுடாவில் டிராகன் விண்கலத்தில் விண்வெளி வீரர்கள் நான்கு பேர் தரையிறங்கினர் .

வீரர்களின் மீட்புப் பணியில் மஸ்க் தலையிட்டதற்கு டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார். "எலான் இல்லையென்றால், அவர்கள் அங்கே நீண்ட காலம் இருக்க வேண்டியிருக்கலாம்" என்றும் டிரம்ப் கூறினார்.

பிடன் குறித்த விமர்சனம்:

டொனால்டு டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இருவரும் முன்னாள் அதிபர் ஜோ பிடன் விண்வெளி வீரர்களின் நிலைமையைக் கையாண்ட விதத்தை விமர்சித்துள்ளனர். எலான் மஸ்க் விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்புவதில் ஏற்படும் தாமதத்திற்கு "அரசியல் காரணங்கள்" இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.

பைடன் விரைவாக செயல்படத் தவறிவிட்டதாக டிரம்ப் குறை கூறினார். இந்த மாதத் தொடக்கத்தில், "அவர் அவர்களை விண்வெளியில் விட்டுச் செல்லப் போகிறார் என்று நான் நினைக்கிறேன்..." எனவும் டிரம்ப் பேசியிருந்தார்.