அமெரிக்கா அதிபர் டிரம்பின் கையாளாகாத தனத்தால் கொரோனாவை கட்டிற்குள் கொண்டு வர முடியாமல் சீனாவை குறை கூறுகிறது அர்த்தமற்றது என வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியுள்ளார்.

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகளிலேயே அதிக உயிரிழப்பை சந்தித்திருப்பது அமெரிக்கா தான். இதுவரை அமெரிக்காவில் 16 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 95 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மிகவும் ஆபத்தான நிலையில் 17,000 பேர் இருந்து வருகின்றனர். ஆனால், ஆரம்பம் முதலே கொரோனா பரவலுக்கு சீனா தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.  மேலும், சீனாவிற்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்படுவதாக கூறி அவர்களுக்கு நிதி வழங்குவதையும் தற்காலிகமாக டிரம்ப் நிறுத்திக் வைத்துள்ளார்.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவருக்கு டிரம்ப் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கடிதத்தில், அடுத்த நாட்களில் சீனாவிடம் இருந்து விடுபட்டு சுதந்திரமாக இயங்குவதை நிரூபித்து காட்ட வேண்டும். அப்படி இல்லையென்றால் உங்களுக்கு நிதி வழங்குவதை முற்றிலுமாக நிறுத்தி விடுவோம். அதேபோல உலக சுகாதார அமைப்பின் உறுப்பினராகவும் தொடர மாட்டோம் என மிரட்டும் தொணியில் கடிதம் எழுதியிருந்தார். இந்த சம்பவம் உலக மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இது தொடர்பாக சீனாவின் வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறுகையில் 'உலக சுகாதார அமைப்பின் தலைவருக்கு டிரம்ப் எழுதிய கடிதம் தெளிவற்ற வெளிப்பாடுகளால் நிரம்பியுள்ளது. சீனா மீது அவதூறு பரப்பவே இது போன்ற முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபடுகிறது. அமெரிக்காவில் கொரோனாவை கட்டிற்குள் கொண்டு வராமல் திறமையில்லாமல் செயல்பட்டு கொண்டு சீனாவை குறை கூறுகிறது. 

உலக சுகாதார நிறுவனத்துக்கு உரிய பங்களிப்புகளை சரியான நேரத்தில் செலுத்துவது என்பது உறுப்பு நாடுகளின் கடமை ஆகும். இதை வைத்து பேரம் பேசக்கூடாது. அப்படிப்பட்ட சூழலில், உலக சுகாதார நிறுவனத்துக்கான நிதியை நிறுத்துவேன் என்று ஒருதலைப்பட்சமாக அமெரிக்கா அச்சுறுத்துவது என்பது கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில் அதன் சர்வதேசக் கடமையை அமெரிக்கா மீறுவது ஆகும்' என தெரிவித்துள்ளார்.