அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள Donald Trump-க்கு Wisconsin மாகாணத்தில் பதிவான வாக்குகள் மீண்டும் எண்ணப்படுகிறது. வரும் 10-ம் தேதிக்குள் இப்பணி முடிக்கப்படும் என Wisconsin தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த 8ம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் Donald Trump வெற்றிபெற்றார். Wisconsin உள்ளிட்ட 3 மாகாணங்களில் பதிவான வாக்குகள் மீண்டும் எண்ணப்படவேண்டும் என இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலரி கிளிண்டனின் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிட்ட பசுமைக் கட்சி வேட்பாளர் Jill Stein, வாக்குப்பதிவு எந்திரங்களில், ரஷ்யாவின் தில்லுமுல்லு காரணமாக Wisconsin மாகாணத்தில் Trump வெற்றிபெற்றுள்ளதாகவும், எனவே, இங்கு பதிவான வாக்குகள் மீண்டும் எண்ணப்பட வேண்டும் என்றும் அந்த மாகாணத் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தார். மேலும், Trump வெற்றிபெற்ற பென்சில்வேனியா, மிச்சிகன் ஆகிய மாகாணங்களிலும் அவருக்கு கிடைத்த வாக்குகளை மீண்டும் எண்ணக்கோரி மனு அளிக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து, Wisconsin மாகாணத்தின் பதிவான வாக்குகள் மீண்டும் எண்ணப்படவிருப்பதாகவும், டிசம்பர் மாதம் 10ம் தேதிக்குள் இந்தப் பணி முடிவடையும் என்றும் மாகாணத் தேர்தல் ஆணையர் Michael Haas தெரிவித்துள்ளார். இந்த மாகாணத்தில் 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் Trump வெற்றிபெற்றுள்ளார். இவருக்கு 14 லட்சத்து 4 ஆயிரம் வாக்குகளும், ஹிலரி கிளிண்டனுக்கு 13 லட்சத்து 81 ஆயிரத்து 823 வாக்குகளும், Jill Stein-க்கு 31 ஆயிரத்து 6 வாக்குகளும் கிடைத்துள்ளன.
டிசம்பர் 19ம் தேதி தேர்தல் சபை உறுப்பினர்கள், முறைப்படி அமெரிக்க அதிபராக Trump-ஐ தேர்ந்தெடுக்க உள்ள நிலையில், இந்த மறு வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
