6 Muslim countries prohibiting people from entering the US tycoon Donald Trump has issued new orders

அமெரிக்காவில் நுழைவதற்கு 6 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு தடைவிதித்து அதிபர்டொனால்ட் டிரம்ப் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். ஏற்கனவே பிறப்பித்த ஆணையில் இருந்து ஈராக் நாடுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதலைக் குறைக்க வேண்டும், பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும், அதற்கு தான் அதிபராக வந்தால் அமெரிக்காவில் நுழைய முஸ்லிம்களுக்கு தடை விதிப்பேன், அகதிகளுக்கும் அனுமதி கிடையாது என்று டிரம்ப் தேர்தல் பிரசாரத்தில் கூறியிருந்தார். அதை நிறைவேற்றும் வகையில் கடந்த ஜனவரி 27-ந்தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். 

அதில் சூடான், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, ஏமன், மற்றும் ஈராக் ஆகிய முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் நுழைய 90 நாட்கள் தடை விதித்தும், அனைத்து நாட்டு அகதிகள் நுழைய 120 நாட்கள் தடை விதித்தும் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இந்த உத்தரவுக்கு அமெரிக்காவில் பல்வேறு நகரங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது, ஆயிரக்கணக்கான மக்கள் சாலையில் இறங்கியும் விமான நிலையத்திலும் போராட்டம் நடத்தினர். சர்வதேச அளவில் எதிர்ப்பு வலுத்தது. இதை எதிர்த்து சீட்டல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி, இந்த உத்தரவை ரத்து செய்தார். 

இந்நிலையில், பல்வேறு திருத்தங்களுடன் அதிபர் டிரம்ப் புதிய உத்தரவை நேற்று பிறப்பித்தார். இந்த புதிய உத்தரவு இம்மாதம் 16-ந் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. 

அதில் ஈராக் நாடு அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பதாக கூறியதையடுத்து, அந்நாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 6 நாடுகளைச் சேர்ந்தவர் ஏற்கனவே முறைப்படியான விசா வைத்து இருந்தால் அவர்களுக்கு தடை விதிக்கப்படாது என்பது உள்ளிட்ட விவரங்கள் கூறப்பட்டுள்ளது.

ஜன. 27ந் தேதி உத்தரவு.....


* சூடான், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, ஏமன், மற்றும் ஈராக் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் நுழைய தடை
* விசா வைத்து இருந்தாலும், நிரந்தர குடியுரிமை பெற்று இருந்தாலும் இந்த 7 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி கிடையாது. 
* அனைத்து நாட்டு அகதிகளுக்கும் 120 நாட்கள் அமெரிக்காவில் நுழைய தடை. 
* சிரியா நாட்டில் இருந்து வரும் அகதிகள், சுற்றுலாபயணிகள் உள்ளிட்டோருக்கு நிரந்தரமாகத் தடை. 
* சிரியாவில் இருந்து வரும் கிறிஸ்துவர்களுக்கு சில விஷயங்களில் சிறப்பு உரிமை அளிக்கப்படும்.

மார்ச் 7-ந்தேதி புதிய ஆணை.......


* அமெரிக்கா வருவதற்கு புதிதாக விசாவுக்காக விண்ணப்பிக்கும் முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும். 
* அமெரிக்க குடியுரிமை வைத்திருப்பவர்கள், சட்டப்பூர்வ விசா வைத்து இருப்பவர்களுக்கு இந்த தடை பொருந்தாது. 
* இந்த உத்தரவு இதற்கு முன் பிறப்பிக்கப்பட்ட போது, விசா வைத்திருந்தவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அவர்கள் இப்போது மீண்டும் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். 
* இந்த புதிய உத்தரவில் சூடான், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, ஏமன், நாடுகளுக்கு மட்டுமே தடை பொருந்தும். ஈராக் தடையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. 
* ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பட்டியலில் இருக்கும் அகதிகளுக்கு அனுமதி வழங்கப்படும். 
* சிரியா நாட்டைச் சேர்ந்த மக்களும், மற்ற 5 நாட்டு மக்களைப் போலவே நடத்தப்படுவார்கள். மிகவும் மோசமாக முறையில் தாழ்த்தி நடத்தப்பட மாட்டார்கள் 
* அமெரிக்க பள்ளி, கல்லூரிகளில் படித்தவர்கள், பணியாற்றி இருந்தவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். 
* அமெரிக்காவில் வசித்து வரும் நெருங்கி உறவினர்களை பார்க்கவும், அவர்களுடன் தங்கி இருக்கவும் அனுமதிக்கப்படுவார்கள். 
* பச்சிளங் குழந்தைகள், சிறுவர்,சிறுமிகள், அனாதைகளுக்கு மருத்துவ வசதிகள் அளிக்கப்படும். 

பாதுகாப்பாக மாற்றும்


அமெரிக்க உள்துறைபாதுகாப்பு செயலாளர் ஜான் எப். கெல்லி கூறுகையில், “ அதிபர் டிரம்பின் இந்த புதிய உத்தரவு அமெரிக்காவை பாதுகாப்பாக மாற்றும். குடியேற்ற பாதுகாப்பில் நீண்டகாலமாக நீடித்து வரும் கவலைகள் களையப்படும்'' எனத் தெரிவித்தார்.