வட அட்லாண்டிக் கடலில் மூழ்கிய புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலின் உயிர்காக்கும் கவசம் வைக்கும் பெட்டகத்தின் சாவி ரூ. 70 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

டைட்டானிக் கப்பல் தொடர்பான பொருட்களை சமீபத்தில் ஏலம் விடப்பட்டதில் மிக அதிகமான தொகைக்கு ஏலம் போனதில் இது மிகப் பெரியதாகும்.

கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரல் 10-ந்தேதி இங்கிலாந்தின் சவத்தாம்டன் நகரில் இருந்து 1500 பயணிகளுடன் நியூயார்க் நோக்கி டைட்டானிக் எனும் பிரமாண்ட நீராவிக் கப்பல் பயணமானது. இந்த கப்பல் புறப்பட்ட 4 நாட்களில் ஏப்ரல் 14-ந்தேதி வடக்கு அட்லாண்டிக் கடல்பகுதியில் உள்ள பனிப்பாறையில் மோதி கப்பல் விபத்துக்குள்ளானது. படிப்படியாக கடலில் மூழ்கிய இந்த கப்பலில் இருந்த 1500 பயணிகளில் 710 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர் மற்றவர்கள் பலியானார்கள்.

தற்போது பெர்க்‌ஷையர் நகரில் வசிக்கும் ஸ்டூவர்ட் சிட்னி செட்நாரி என்பவர் இந்த டைட்டானிக் கப்பலில் 3-ம் வகுப்பில் பயணம் செய்து உயிர் பிழைத்தவர். அவரிடம் தான் பயணம் செய்த வகுப்பில் இருந்த உயிர்காக்கும் கவசம் வைக்கும் லாக்கரின் சாவி இருந்தது.

அதை டெவிசெஸ் நகரில் உள்ள ஒரு ஏல நிறுவனம் மூலம் அந்த சாவியை கடந்த வெள்ளிக்கிழமையன்று ஏலத்தில் விட்டார். இந்த ஏலத்தில் சாவி 50 ஆயிரம் பவுண்ட்களுக்கு தான் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 85 ஆயிரம் பவுண்ட்களுக்கு (ரூ.70லட்சம்) ஏலம் எடுக்கப்பட்டது.

இது குறித்து ஏலநிறுவனத்தின் உரிமையாளர் ஆன்ட்ரூ அல்டிரிட்ஜ் கூறுகையில், “ நாங்கள் நினைத்ததைக் காட்டிலும் அதிகமான தொகைக்கு சாவி ஏலம் எடுக்கப்பட்டு இருப்பது, இந்த சாவியின் முக்கியத்துவத்தையும், தனித்தன்மையையுமே காட்டுகிறது'' என்றார்.

அதேபோல, இந்த கப்பலின் தலைமை அதிகாரி ஹென்ரி வில்டே எழுதிய கடிதங்களும் ஏலம்விடப்பட்டன. அவை ரூ. 4லட்சத்துக்கு(5 ஆயிரம் பவுண்ட்) ஏலம் எடுக்கப்பட்டது.