அமெரிக்காவிற்கு எதிரான மற்றொரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ள வடகொரியா, எத்தனை தடைகள் வந்தாலும் அணு ஆயுத சோதனைகள் தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரிய விவகாரம், ஒரு மிகப்பெரிய சண்டையில் போய் முடிவதற்கு வாய்ப்பு உள்ளது என பதிலடி கொடுத்துள்ளார்.

வடகொரியா தொடர்ந்து 5 முறை அணு குண்டு சோதனைகளை நடத்தியுள்ள நிலையில்  6–வது  முறையாக அணுகுண்டு சோதனையை நடத்தப்போவதாகவும் மிரட்டல் விடுத்து வருகிறது.

மேலும்  தொடர்ந்து ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது. அணு ஆயுத சோதனையை ஒருபோதும் கைவிட முடியாது என்று அந்த நாடு உறுதிபட தெரிவித்துள்ளது.

இதையடுத்த  வடகொரியாவை தனிமைப்படுத்தும் வகையில் மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை அமெரிக்கா வலியுறுத்த முடிவு செய்துள்ளது.

வடகொரியாவின் தொடர் அத்துமீறல்கள் அதன் ஆதரவு நாடான சீனாவுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சீனாவும் வட கொரியா மீது பொருளாதார தடை விதிக்கப் போவதாக எச்சரித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் வெள்ளைமாளிகையை தனது அணுஆயுதத்தால் தாக்கி அழிப்பது போன்ற புதிய வீடியோ ஒன்றை வடகொரியாவின் இணையதளமான Meari-யில் வெளியிடப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு மனோபாவம் தொடரும் வரை தங்களது அணு ஆயுத சோதனை தொடரும் என்றும் வட கொரியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரிய விவகாரம், ஒரு மிகப்பெரிய சண்டையில்தான் போய் முடிவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும்  ஆனாலும்  சமாதானமான முறையில்தான் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார் 

இந்நிலையில் வடகொரியா மீது அமெரிக்கா போர் தொடுத்தால், அந்தப் போரில் வடகொரியாவும் சரியான பதிலடி கொடுக்கும் ஆபத்து உள்ளது. அது தென்கொரியா, ஜப்பான் நாடுகளிலும் உயிரிழப்பை ஏற்படுத்தும். அவ்விரு நாடுகளில் உள்ள அமெரிக்க படைகளுக்கும் சேதத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.  இதன் மூலம் மூன்றாம் உலகப் போர் மூளும் நிலை உருவாகியுள்ளது.